முன்னாள் ராணுவ வீரரின் வயிற்றில் இருந்த ரத்தக்குழாய் வீக்கம், சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறிய துளை வழி அறுவைச் சிகிச்சை (எண்டோ வாஸ்குலர் சிகிச்சை) மூலம் சரிசெய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியை சேர்ந்தவர் வீரப்பன் (75). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 2011-ம் ஆண்டு, இவருக்கு வயிறு மற்றும் முதுகில் வலி ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது, இவருடைய வயிற்றில் உள்ள ரத்தக்குழாய் வீங்கி இருப்பது தெரியவந்தது. இதனை சரிசெய்ய லட்சக்கணக்கில் செலவாகும். ஆனாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். அதனால், அவர் சிகிச்சைப் பெறாமல் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் வயிறு மற்றும் முதுகில் வலி அதிகமானதால் சிகிச்சைக்காக, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு கடந்த 10-ம் தேதி வந்தார். அங்குள்ள டாக்டர் கள் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த 13-ம் தேதி ரத்த நாள அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் டாக்டர்கள் பக்தவச்சலம், அருண கிரி, மருதுதுரை, ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் எண்டோ வாஸ்குலர் அறுவைச் சிகிச்சையின் மூலம் வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு ரத்தக்குழாய் வழியாக சென்று டியூப் வடிவிலான சிறிய கருவியை ரத்தக்குழாய் வீங்கியிருந்த பகுதியில் வெற்றிகரமாக பொருத் தினர். இந்த சிகிச்சைக்கு பிறகு வீரப்பன் உடல்நிலை நன்றாக இருப் பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ரத்த நாள அறுவைச் சிகிச்சை துறை தலைவர் எஸ்.ஜெயக்குமார் கூறியதாவது:
இதுபோன்ற சிகிச்சை பெரும்பாலும் வயிற்றை கிழித்து தான் செய்யப்படும். சிகிச்சைக்கு பிறகு, அவர் சாப்பிடவும், நடக்கவும் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும். மேலும் உயிருக்கு 100 சதவீதம் உத்திரவாதம் கொடுக்க முடியாது. அதனால்தான் எண்டோ வாஸ்குலர் சிகிச்சை மூலம் சிறிய துளையிட்டு ரத்தக்குழாய் வீக்கம் சரிசெய்யப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை சுமார் 2 மணி நேரம் நடந்தது. சிகிச்சை முடிந்த அன்றைய தினம் மாலையே அவர் நன்றாக சாப்பிடவும், நடக்கவும் செய்தார். இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக, இதுபோன்ற சிகிச்சை இங்குதான் செய்யப்பட்டுள்ளது.
ரத்தக்குழாய் உள்ளே பொருத் திய டியூப் வடிவிலான கருவிக்கு மட்டும் ரூ.5 லட்சம் ஆகும். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top