புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் முன் திரண்டவர்களை விரட்டும் போலீஸார்.
புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வாழைக்குளம் பகுதியில் உள்ளது. இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீ, அருணாஸ்ரீ, ராஜ்யஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் சிறு வயதில் இருந்தே தங்கி உள்ளனர்.
இவர்களில் ஹேமலதா பிரசாத்தின் மீது கடந்த 2002-ம் ஆண்டு ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு ஹேமலதா உள்ளிட்ட 5 சகோதரிகளும் ஆசிரமத்தை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 5 சகோதரிகளும் அந்த உத்தரவை பின்பற்றவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் ஆசிரம நிர்வாகம் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 31-க்குள் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், ஹேமலதா நேற்று ஆசிரமத்தின் 4-வது மாடியில் ஏறி நின்று, "ஆசிரமத்தில் இருந்து என்னை யாராவது வெளியேற்ற முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். பின்னர் போலீஸார் அவரை மீட்டனர். 5 சகோதரிகளும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற சம்மதித்தனர். இதனையடுத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடலில் விழுந்து தற்கொலை:
இந்நிலையில் இன்று காலை 5 சகோதரிகளும் அவர்களது பெற்றோரும் கடலில் விழுந்தனர். அங்கே இருந்த மீனவர்கள் சிலர் 4 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 3 பேர் கடலில் மூழ்கினர். சாந்தி ஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரது உடலும் கரை ஒதுங்கியது.
ஆசிரமம் மீது கல்வீச்சு:
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக பீஹார் சகோதரிகள் ஏற்கெனவே பல முறை தெரிவித்திருந்தனர். மேலும் அரவிந்தர் ஆசிரமத்தின் மீது 300 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அரவிந்தர் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர், தந்தை பெரியார் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரமப் பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்ற போலீஸார் முற்பட்டனர். அப்போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அசிரமத்தின் கண்ணாடிகள், பாரம்பரியச் சின்னம் சேதமடைந்தன.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top