சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் மேலும் 4 மாத காலம் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதா | கோப்புப் படம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
மேலும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடுக்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேல் முறையீடு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கடந்த 8-ம் தேதி (டிச.8) ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான சுமார் 2.15 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கர்நாட‌க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்: "சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் மேலும் 4 மாத காலம் ஜாமீன் நீட்டிக்கப்படுகிறது. அதாவது ஏப்ரல் 18, 2015 வரை ஜாமீன் நீட்டிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும். இதை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏற்று செயல்படுத்த வேண்டும்.
மேல்முறையீட்டு மனு விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை தினசரி மேற்கொள்ளப்பட வேண்டும்" என உத்தரவிட்டனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top