இஸ்லாமாபாத், டிச.10-

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து வங்காள தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கித் தந்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளித்த பதிலடிதான் ‘கார்கில் போர்’ என பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷரப் குறிப்பிட்டுள்ளார்.
வங்காளதேச பிரிவினைக்காக பாகிஸ்தான் கொடுத்த பதிலடியே கார்கில் போர்: முஷரப் வாய்க்கொழுப்பு பேட்டி
சிறுபான்மையின மக்களை ஒடுக்கிவந்த பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது.

இந்த விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட வங்காளதேசத்தினர் அகதிகளாக இந்தியாவுக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட வங்காளதேச மக்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தது.

இந்தப் போரில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. இந்தியா வெற்றி பெற்றது. வங்காளதேசம் என்ற புதிய தனிநாடு உதயமானது.

இந்தப் போரில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியாவை பழி வாங்குவதற்காகவே 1999-ம் ஆண்டு கார்கில் போர் தொடுக்கப்பட்டதாக முஷரப் தற்போது பேட்டியளித்துள்ளார். அந்நாட்டின் சமா டி.விக்கு அளித்த பேட்டியில் முஷரப் கூறியுள்ளதாவது:-

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை பிரித்து, சியாச்சின் பகுதியையும் கைப்பற்ற முயற்சித்ததோடு, இதைப்போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கும் இந்தியா திட்டமிட்டது. இதன் விளைவாகவே கார்கில் போர் ஏற்பட்டது.

எல்லா நிலைகளிலும் பதிலுக்கு பதில் என்ற கொள்கையில் நான் நம்பிக்கை கொண்டவன். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்தால் மட்டுமே இந்தியாவுடனான நட்பு என்பது சாத்தியப்படும். நட்புக்கான பாதையை நோக்கி இந்தியா ஒரு அடி முன்னேறி வந்தால், பாகிஸ்தான் இரண்டு அடி முன்னேறிச் செல்லும்.

இந்தியாவோடு நட்பு பாராட்ட நான் விரும்பவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். இது சரியல்ல. எனது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவு நல்ல முறையில் இருந்தது. நரேந்திர மோடியின் தலைமையிலான தற்போதைய அரசு அமைந்துள்ள நிலையிலும் இந்தியாவுடன் நட்புறவு கொள்வது என்பது சாத்தியமானதே. 

ஆனால், அந்த நட்பானது, இந்தியாவுக்கு அடிபணிந்தோ, அவர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டோ அமையக் கூடாது. ஆக்ரோஷமான நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்தால் இதே பாணியில் நாமும் பதிலடி கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top