நகரங்கள் ஓர் இரவில் உருவாகிவிடுவதில்லை. வரலாற்றுப் போக்கிலேயே நகரங்கள் உருவாகப் பல நூற்றாண்டுகள் ஆகலாம். பொருள் உற்பத்திக்குத் தேவையான சூழல் அங்கு நிலவ வேண்டும்; வாழ்வுக்கு வழி தேடி வருபவர்களுக்கு அங்கே வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்; பொருள் உற்பத்தி நகரை விட்டு வெளியில் சென்று வளம் சேர்க்க, சாலை வசதிகளும் வாகன வசதிகளும் வேண்டும். மேற்குறிப்பிட்ட காரணிகள் இருந்தாலே ஒரு நகரம் உருவாக முடியும்.
பண்டைய நகரங்கள் ஆற்றங்கரை ஓரங் களிலும், செழிப்பான சமவெளிகளிலுமே இருந்தன. கடல்வழி வாணிபம் பெருகியபோது கடலோர நகரங்கள் உருவாயின. இந்நகரங்களில் ஒரு பொதுவான கூறு உண்டு. நகரத்தின் மக்கள் தொகை பெருகப்பெருக சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கியிருக்கும் மக்கள், முக்கியமாக உடலுழைப்பாளிகள் நகரத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவார்கள்.
ஆதிகால ஹரப்பா-மொகஞ் சதாரோவிலிருந்து இன்றைய நியூயார்க் (ஹார்லெம்), மும்பை (தாராவி), சென்னை (கண்ணகி நகர்) வரைக்கும் இதே நிலைதான். இருப்பவருக்கு ஒரு நகரம்; இல்லாதவருக்கு மற்றொரு நகரம் என்ற இருமை தமிழ்நாட்டின் தலைநகரில் உண்டு. தமிழ்நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்குப் புதிதாக வருபவர்கள்கூட இரு வேறு சென்னைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டுகொள்ள முடியும். அண்ணா நகரையே ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இரு வேறு சென்னைகள்
அண்ணா நகருக்குள் சுற்றித் திரியும்போது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் மாடி வீடுகளும் இன்ஜினீயர், டாக்டர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதி போன்ற அடைமொழிகளோடு வெளியில் பொருத்தப் பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளும்தான். சில பகுதிகளில் நடக்கும்போது நிசப்தமே பெரும் சத்தமாய் மாறி நம்மை அழுத்துவதுபோலத் தோன்றும். வீடுகள் தேவையான அளவுக்கு இடம் விட்டே கட்டப்பட்டிருக்கும். வீட்டின் முன் புறத்திலோ பின்புறத்திலோ, இல்லையேல் இருபுறங்களிலுமோ ஒரு சின்னத் தோட்டம் இருக்கும். அண்ணா நகருக்கு உள்ளேயே சுற்றிக்கொண்டிருந் தீர்களானால் இவற்றையும், செல்வச் செழிப்பின் பிற அடையாளங்களையும் காணலாம்.
அண்ணா நகரிலிருந்து வெளியேறி புதிய ஆவடி சாலையில் கொஞ்ச தூரம் நடந்தால் டாக்டர் அம்பேத்கர் நகருக்குள் நுழையலாம். அங்கே போதுமான பராமரிப்பு இல்லாத அடுக்குமாடிக் கட்டிடங்களைக் காணலாம். அவை தமிழகக் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டவை என்று நினைக்கிறேன். குடிநீர் வரும் நேரத்தைப் பற்றியும் குடிநீர் பயன்பாட்டைப் பற்றியும் ஒவ்வொரு கட்டிடத்திலும் எழுதப்பட்டிருக்கும். குடிநீர் லாரிகள் வரும்போது மக்கள் கூட்டம் அலைமோதும்.
அப்படியே அந்த வழியில் வரும் 46 G பஸ்ஸில் ஏறினால் அயனாவரம், ஓட்டேரி, சயானி வழியாக மகாகவி பாரதியார் நகருக்குப் போகலாம். போகும் வழி முழுக்கக் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட பராமரிப்பற்ற அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மக்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் மக்கள் யாரும் குடியிருக்க விரும்பாத அளவுக்குப் பாழடைந்து, சிதிலமடைந்து கிடக்கும்.
இந்த இருமை மட்டும் இக்கால இந்திய நகரங்களின் பிரச்சினை அல்ல. திட்டமிடப்படாத நகரமயமாக்கலால் நகரங்களில் உருவாகும் நெரிசல், மோசமான நீர் மேலாண்மை, அதனினும் மோசமான கழிவு மேலாண்மை, பாதசாரிகளுக்கான நடைபாதைகள் ஒழுங்காக இல்லாமை (இருக்கும் நடைபாதைகளிலும் பைக் ஓட்டிச் செல்கிறார்கள்) என பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நவீன நகரங்கள்
இருக்கிற நகரங்களில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்க, மத்திய அரசு 100 நவீன நகரங்களை நிர்மாணிக்க ரூ. 7,060 கோடியை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்ததைப் பற்றிப் படிக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஜப்பானும் சிங்கப்பூரும் இந்த நவீன நகரத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளன.
100 நகரங்களுக்கு ரூ. 7,060 கோடி என்று கணக்கிட்டால், ஒரு நகருக்குச் சராசரியாக ரூ. 70.6 கோடி வருகிறது. அதைக் கொண்டு ஒரு நகரத்தைப் புதிதாய் உருவாக்குவது சாத்தியமற்றது. எனவே, அதனை ஆரம்ப மூலதனம் என்றே கொள்ள வேண்டும். புதிதாய் நிர்மாணிக்கும்போது செலவு அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு; அது யாருக்கும் வேண்டாத, நிராதரவான நகரமாகவும் மாறிவிடக் கூடும்.
நாம் செல்ல வேண்டிய பாதை மிகத் தெளி வானது. புதிதாய் நகரங்களை நிர்மாணிப்பதற்குப் பதில், ஏற்கெனவே இருக்கும் நகரங்களைப் புனர்நிர்மாணம் செய்து, நவீன நகரங்களாக மாற்றி விரிவுபடுத்துவதன் மூலம் மக்கள்தொகை நெருக்கத்தைக் குறைத்து, அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஏற்கெனவே இருக்கும் நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாமல் உருவாக்கப்படும் நவீன நகரங்கள் செல்வந்தர்களின் சேரிகளாகவும் மாறிவிடக்கூடும்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top