பெட்ரோலில் 5 சதவீதம் பயோ எத்தனாலை கட்டாயமாக கலக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், 1.37 சதவீதம் மட்டுமே கலக்கப்படுவது தெரியவந்துள்ளது.
மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பியூஷ் கோயல் மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் வருமாறு:
எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலில் 5 சதவீதம் பயோ எத்தனாலை கட்டாயமாக கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு கடந்த 2013-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவைக் குறைத்து, உயிரி எரி பொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். எனினும், 2013-14 நிதியாண்டில் 1.37 சதவீதம் மட்டுமே பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்பட்டது.
எத்தனால் கிடைக்கும் அளவைப் பொறுத்து, இதை படிப்படியாக அதிகரித்து நிர்ணயிக்கப்பட்ட 5 சதவீத அளவை எட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எத்தனால் பெரும்பாலும் கரும்பு பாகிலிருந்து தயாராகிறது. இது எரி சாராயம் தயாரிக்கவும், ரசாயன தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மீதம் உள்ள எத்தனால் மட்டுமே பெட்ரோலில் கலக்க பயன் படுத்தப்படுகிறது.
உயிரி எரிபொருளை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவி வருகிறது. இதற்காக 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.107.15 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.67.14 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top