தமிழகத்தில் சமையல் காஸ் நேரடி திட்டத்தை செயல்படுத்தும் முன்னர் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் காஸ் நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அறிகிறேன்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய், உரங்கள் போன்ற பொருட்களை நேரடி மானியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
காஸ் நேரடி மானியத்தைப் பெற பயணாளர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பதை அவசியமாக்கப்படக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | கோப்புப் படம்
அதேவேளையில், காஸ் வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
சமையல் காஸ் நேரடி மானியத்துக்கான தொகையை பயணாளர்களுக்கு மாநில அரசு மூலமாகவே மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது.
நேரடி மானியத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே கடைபிடித்துவருகிறது. இது தமிழக அரசுக்கு புதிதல்ல. திருமண உதவித் திட்டம், பிரசவகால உதவித் திட்டம் போன்ற மாநில அரசின் கீழ் வரும் சமூக நல திட்டங்களுக்கு நேரடி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சிலிண்டர் மீது மானியம் அளிப்பது மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் வரம்புக்குள் வருவதால், இந்த திட்டத்தில் பயணாளர்களுக்கு சிரமம் ஏற்படாமல் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் பொதுத்துறை வங்கிகள் இல்லை. இந்நிலையில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதிப்படுத்துவதுடன் நுகர்வோருக்கு சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்க, அஞ்சல் நிலையம் மற்றும் கூட்டுறவு வங்கிக் கணக்குகள் மூலமும் சிலிண்டர் மீதான மானியம் அளிக்க அனுமதிக்க வேண்டும்.
காஸ் விலை சர்வதேச விலைக்கு ஏற்ப மாறத்தக்கது என்பதால், அதன் மீதான மானியத்தை மத்திய அரசு ஒரு முறை மட்டுமே நிர்ணயிப்பது சரியாகாது. சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மானியத்தை அவ்வப்போது திருத்தி அமைக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தாததால் குழப்பம் நீடிக்கிறது. இது அடிதட்டு, நடுத்தர மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, காஸ் நேரடி மானியத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் முன்னர் மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலுயுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.