மதுரையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்ட நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 150 பேரிடம் போனில் நேரடியாகப் பேசியுள்ளது நிர்வாகிகளிடையே புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்: பிடிஐ
மதுரையில் நவ. 20, 22ம் தேதிகளில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் திமுகவினர் மட்டுமின்றி தொழிலதிபர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினர், மாணவ, மாணவியர் உட்பட பல்வேறு தரப்பினரையும் ஸ்டாலின் சந்தித்து திமுகவின் நிலை, எதிர்கால வளர்ச்சி, நிர்வாகிகள் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். இதில் சரமாரியாக புகார்கள் சொல்லப்பட்டன.
இது குறித்து கட்சியினர் கூறியது: ஸ்டாலினிடம் எந்த நேரத்திலும் பேசும் அளவுக்கு நெருக்கமாக உள்ள தன்னால் 3 ஆண்டுகளாக கடும் முயற்சியில் ஈடுபட்டும் உறுப்பினர் கார்டுகூட வாங்க முடியவில்லை என பொறியாளர் ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார். பதவி வழங்க பேரம் பேசுகின்றனர். அழகிரி இருந்தபோதுதான் இப்படி என்றால், தற்போது பழைய நிலையைவிட மோசமாக உள்ளது. மாவட்டச் செயலர் மூர்த்தி, பொறுப்பாளர் கோ.தளபதி மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சிலர் ஆளுக்கு ஒருவரை சிபாரிசு செய்கின்றனர். இப்படி போட்டியை உருவாக்குவதால் எப்படியும் பதவியை பெற வேண்டும் எனக் கருதுபவர்கள் பணத்தைக் கொட்டுகின்றனர்.
கட்சி எப்படி வளரும்?
பணத்துக்காகப் பதவியை வழங்குவதற்கு ஸ்டாலின் அணி, அழகிரி அணி என காரணம் கூறி ஒதுக்கிவிடுகின்றனர். ஜெயிலை மட்டுமே மாறிமாறி பார்ப்பவரை மாணவரணி செயலராக நியமித்துள்ளது, அழகிரி மகனின் நண்பரான மாநில மாணவரணி துணை அமைப்பாளரை இன்னும் மாற்றாதது என செயல்பட்டால் கட்சி எப்படி வளரும்? எந்த அணியிலும் கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்பவர்களே எப்போதும் முன்னால் நிற்பதால் உண்மையான விசுவாசிகள் பயந்து ஒதுங்குகின்றனர் என பலவாறு குமுறினர்.
‘கருணாநிதி இருக்கும்போதே முதல்வர் ஆக நீங்கள் எதற்காக துடிக்கிறீர்கள்?’ என ஒருவர் கேட்டதும் அதிர்ச்சியடைந்த மு.க.ஸ்டாலின், ‘கட்சி வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகிறேன். கருணாநிதி கூறும் பணிகளைத்தான் செய்கிறேன். கருணாநிதிதான் முதல்வராவார். அவர் கட்டளையிட்டால் மட்டுமே நான் எந்த ஒரு பதவியையும் ஏற்பேன்’ என்று பொறுமையாக பதிலளித்துள்ளார்.
இப்படி அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்ட நிலையில், நிர்வாகிகளுக்கு பயந்து வெளிப்படையாக பேசாமல் பலர் மனுவில் புகார்களை கொட்டியிருந்தனர். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு மதுரையில் பல புதிய பிரச்சினைகளை ஸ்டாலின் எதிர்கொண்டார். இது குறித்து வெளிப்படையாக பேசினால் அழகிரியுடன் முடிச்சு போட்டுவிடுவார்கள் எனக்கருதி ஸ்டாலின் அதிகம் பேசவில்லை.
இந்நிலையில் கடந்த 2 நாளாக மதுரையில் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் மு.க.ஸ்டாலின் போனில் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியுள்ள தகவல் வெளியானதும் நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஆலோசனை நிச்சயம் நிறைவேறும்
இது குறித்து கட்சிப் பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘என்னை பெயரைச் சொல்லி போனில் ஸ்டாலின் அழைத்ததும் என் னால் நம்பவே முடியவில்லை. ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்த ஆலோசனை நிச்சயம் நிறைவேறும். உங்கள் புகார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப் படும். கட்சி வளர உங்கள் பணியை தொய்வில்லாமல் செய்யுங்கள் என்றார் ஸ்டாலின். காலை 7 மணி முதல் இரவு 11.30 மணிவரை ஸ்டாலின் 150க்கும் மேற்பட்டோரிடம் பேசியுள்ளார்’ என்றார்.
மதுரை புறநகர் மாவட்டத் தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மாநகரில் நாளை மனுக்கள் பெறப் படுகின்றன. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 150 பேரிடம் நேரடியாகப் பேசியுள்ளது நிர்வாகிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தகுதியானவர்களுக்கு பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மதுரை திமுகவில் புதிய பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top