தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக நேற்று பணியிட மாற்றம் செய்ய‌ப்பட்டார்.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்குக்கு பெங்களூரு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சோமராஜு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இவ்வழக்கின் பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள குர்பூராவை சேர்ந்தவர் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா (55). கொங்கணியை தாய்மொழியாக கொண்ட இவர் 1985-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். மங்களூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு குற்றவியல் வழக்குகளில் வாதிட்ட இவர், 2002-ம் ஆண்டு நீதிபதியாக தேர்வானார்.
பெங்களூரு, பெல்லாரி, தார்வாட் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களிலும் குடும்பநல நீதிமன்றத்திலும் நீதிபதியாக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு தார்வாட் மாவட்ட முதன்மை அமர்வு நீதிம‌ன்ற நீதிபதியாக இருந்தபோது ஒரு வழக்கில் அப்போதைய மத்திய‌ பிரதேச முதல்வர் உமா பாரதிக்கு பிடிவாரன்ட் பிறப்பித் துள்ளார்.
வழக்கை மிக வேகமாகவும் துல்லியமாகவும் விசாரிக்கும் நீதிபதி டி'குன்ஹா 4 ஆண்டுகளில் 22 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடக ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்ற பதிவா ளராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நியமிக் கப்பட்டார். 18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கை மிக விரைவாக விசாரித்து இறுதிக் கட்டத்துக்கு நகர்த்தினார்.
நாள்தோறும் வழக்கை விசாரித்து லட்சக்கணக்கான ஆவணங்களை வாசித்து சுமார் 200 மணி நேர இறுதி வாதங்களை துல்லியமாக பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்தத் தீர்ப்பு இந்திய அரசியல் வட்டாரத்திலும் நீதித்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக தனக்கு வழங்கப்பட்ட பணியை ஓராண்டில் நிறைவு செய்த நீதிபதி டி'குன்ஹா நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் ஏற்கெனவே இந்த பொறுப் பில் சிறப்பாக செயல்பட்டார் என்பதால் மீண்டும் அதே பொறுப்புக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கை கூடுதலாக கண்காணிக்க பெங்களூரு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சோமராஜு நியமிக்கப்பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலி தாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 192 விதமான தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி சோமராஜுவிடம் நீதிபதி டி'குன்ஹா நேற்று ஒப்படைத்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top