சினிமா பிரபலங்களை கட்சியில் இணைப்பதால் மட்டுமே தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.ஞானதேசிகன்| கோப்புப் படம்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஞானதேசிகன்: "சினிமா பிரபலங்களை கட்சியில் இணைப்பதால் மட்டுமே தமிழக அரசியலில் எந்த ஒரு கடசியும் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் அந்த பிரபலத்தை அரசியல் மார்க்கத்தில் முன்னெடுத்துச் செல்ல விரும்பினால் மட்டுமே அது சாத்தியமாகும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். கட்சிக் கொடியை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, திருச்சியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர் அறிமுகம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஞானதேசிகன் வந்துள்ளார். அவர், அரசியிலில் நடிகர்கள் பிரவேசம் குறித்து மேலும் கூறியதாவது:
"தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்களை திரையில் பார்க்க விரும்பும் ரசிகர்களை நம்பி அதை வாக்கு வங்கியாக மாற்ற முணைவது மிகவும் கடுமையான முயற்சியாகும்.
இப்படித்தான், 1989-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அப்போது சினிமா உலகில் புகழின் உச்சியில் இருந்த ஸ்ரீதேவியை பிரச்சார களத்தில் இறக்கியது காங்கிரஸ். ஆனால், அதன் முயற்சி தோல்வியடைந்தது.
ஸ்ரீதேவி, காங்கிரஸ் கட்சிக்காக 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவரது தந்தை அய்யப்பன் போட்டியிட்ட சிவகாசி தொகுதி உள்பட அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியது.
எம்.ஜி.ஆர். அரசியலில் வெற்றி பெற முடிந்தது என்றால், அவர் நடித்த படங்களில் மிக நேர்த்தியாக அரசியலை புகுத்தி ரசிகர்கள் மனதிலும் அந்த எண்ணத்தை அவர் விதைத்தார்.
அதேபோல், ஜெயலலிதாவையும் அரசியலுக்கு அவரே தயார் செய்தார். ஜெயலலிதாவை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார். அது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு வித்திட்டது.
அப்படி அடிமட்ட ரசிகர்களின் ஆதரவை பெற்றால்மட்டுமே நடிகர்களால் அரசியல் கட்சிகள் ஆதாயம் பெறுவதும் சாத்தியம். இல்லாவிட்டால். 2011 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் பயனற்றுபோனது போலவே ஆகும்.
அந்தவகையில், நடிகர் விஜயகாந்த், தன்னை அரசியல் களத்தில் தனது ரசிகர்களை ஏற்றுக்கொள்ள திறம்பட பழக்கப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸில் தான் எந்தக் காரணத்துக்காக வெளியேற நேர்ந்ததோ அந்த நிலை இன்னும் மாறவில்லை. தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் உடனான தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என ஞானதேசிகன் கூறினார்.
மூப்பனாரின் சில விசுவாசிகள் சிலர் காங்கிரஸிலேயே தொடர முடிவு செய்திருப்பது வாசன் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்குமா என்ற கேள்விக்கு, "ஒரு கட்சியில் எத்தனை நூறு தலைவர்கள் இருந்தாலும், உண்மைத் தொண்டன் இல்லாவிட்டால் அந்தக் கட்சி நிலைக்காது" என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top