மாத்தூர், நவ. 30–
திருச்சி–புதுக்கோட்டை சாலை கீரனூர் அருகே உள்ளது குளத்தூர் கிராமம். இங்குள்ள மெயின் ரோட்டில் சிட்டி யூனியன் வங்கி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வங்கியின் மேலாளராக அனுராதா பணியாற்றி வருகிறார்.
நேற்று வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு வங்கியை ஊழியர்கள் பூட்டி சென்றுள்ளனர். தினமும் இரவு நேரத்தில் இந்த வங்கியை போலீசார் கண்காணிப்பது வழக்கம்.வங்கியில் கொள்ளை முயற்சி: போலீசை கண்டதும் 20 கிலோ தங்கத்தை போட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம்
நேற்று போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜன், இளைஞர் பாதுகாப்பு படையை சேர்ந்த கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சாலையோரத்தில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ரோந்து போலீசார் அருகில் சென்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த மூட்டையை கீழே போட்டு விட்டு அந்த வாலிபர் தலைதெறிக்க ஓடினார்.
அவரை பிடிக்க போலீசார் முயன்ற போது இருட்டில் தப்பி ஓடி மறைந்தான். மர்ம வாலிபர் கீழே வீசி சென்ற மூட்டையை கைப்பற்றிய போலீசார் அதுபற்றி மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், புதுக்கோட்டை எஸ்.பி. உமா, டி.எஸ்.பி. ஆறுமுகம், கீரனூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்–இன்ஸ்பெக்டர் சித்ரா, மாத்தூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் வேலு சாமி உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கொள்ளையன் வீசிச்சென்ற மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் சுமார் 20 கிலோவுக்கு அதிகமாக நகைகள் இருந்தது. அருகில் அட்டை பெட்டி ஒன்றும் கிடந்தது. அந்த பெட்டியிலும் தங்க நகைகள் இருந்தது. இந்த நகைகளின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மர்மநபர் எங்கிருந்து கொண்டு வந்தான் என்று போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
சம்பவ இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த வங்கி ஜன்னல் கம்பியால் அறுக்கப்பட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது. இதனை வைத்து அந்த கொள்ளையன் சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் அரங்கேற்றி உள்ளான் என்பது உறுதியானது.
இதையடுத்து வங்கி மேலாளரை வரவழைத்தனர். வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த அனைத்து நகைகளையும் சாக்கு மூட்டையில் அள்ளிய தடயம் இருந்தது.
பல நாட்கள் நோட்டமிட்ட கொள்ளையன் இந்த கொள்ளையை நடத்தி உள்ளான். நள்ளிரவு வங்கிக்கு வந்த கொள்ளையன் துணிகரமாக நகைகளை கொள்ளையடித்து விட்டு அதனை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு செல்ல முயன்றுள்ளான். அப்போது ரோந்து போலீசார் அவனை கண்டதால் மேலும் நகை மூட்டையுடன் அவனால் ஓட முடியாததால் ரோட்டில் மூட்டையை போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
தக்க சமயத்தில் போலீசார் கண்டதால் பொதுமக்களுக்கு சொந்தமான நகைகள் தப்பி உள்ளது. இந்த கொள்ளை பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் வங்கியில் துணிகரமாக சம்பவத்தை அரங்கேற்றிய கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்து வருகிறார்கள். மேலும் இந்த கொள்ளையில் தப்பி ஓடிய வாலிபர் ஒருவர் மட்டும் தொடர்புடையவரா? அல்லது மேலும் பலர் இதற்கு உடந்தையாக இருந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top