மதுரை, நவ. 30–
மோடியை விமர்சிக்காமல் கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும் என்று வைகோ–ராமதாசுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரதீய ஜனதா புதிய உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் 5 மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும்: வைகோ-ராமதாசுக்கு, தமிழிசை வேண்டுகோள்
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரையில் லேசாக மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனை செய்யாமல் முன்னாள் மேயரும், தற்போதைய மேயரும் மாறி, மாறி குறைகள் சொல்லி கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை அதிகம் பரவி வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் மரணம் அடைந்ததற்கு முக்கிய காரணம் அடிப்படை கட்டமைப்பு இல்லாதது தான்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த நிலை உள்ளது. எனவே இங்கு அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும்.
தமிழக அரசு தற்போது சுணக்கமாக செயல்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி தாமதப்பட்டு வருவதே இந்த அரசு எப்படி சுணக்கமாக உள்ளது என்பதை தெரிவிக்கிறது. மதுரையில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம்–ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி துப்பாக்கி தொழிற்சாலை, வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பு போன்ற செயல்களை பார்க்கும்போது, தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை தான் உள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்ட தொடரை நல்லபடியாக நடத்த வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக விவாதம் நடத்த வேண்டும். வைகை ஆறு மற்றும் கண்மாய்கள் தூர்வாராமல் இருக்கின்றன. இதனை தூர்வார மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அதனை பயன்படுத்தி தமிழக அரசு கண்மாய்களை தூர்வார விரைந்து செயல்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருப்பதற்காக நடுக்கடலில் டவர் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 5 மீனவர்களை மத்திய அரசு விரைந்து மீட்டுள்ளது.
தமிழர்கள் நலனில் பாரதீய ஜனதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எனவே வைகோ, ராமதாஸ் போன்றோர் பிரதமரை விமர்சனம் செய்யாமல் கோரிக்கையாக வைக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களுக்கு நல்லதுதான் செய்து வருகிறார். எனவே அவரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். திருவள்ளுவர் தினம், பாரதியார் தினம் என தமிழை வடஇந்தியாவுக்கு எடுத்து செல்வதில் பாரதீய ஜனதா தான் முன்னிலை வகிக்கிறது.
முதல்–அமைச்சர் மாநாட்டை பிரதமர் மோடி விரைவில் கூட்ட இருக்கிறார். இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம் பங்கேற்று தமிழக மக்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும். 6 மாத காலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி மிக சிறப்பாக நடந்து வருகிறது. தங்கம், பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. தமிழகத்தில்தான் பால் விலை உயர்ந்துள்ளது. பாரதீய ஜனதாவை மதவாத கட்சி என்று ஜி.கே.வாசன், குஷ்பு போன்றோர் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் பாரதீய ஜனதா ஒரு மதசார்பற்ற கட்சியாகும். எங்கள் கட்சியில் சிறுபான்மையின சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதத்தை பற்றி பேசாமல் மனிதத்தை பேச கேட்டுக்கொள்கிறேன்.
புதிய கட்சிகள் தோன்றினாலும் பாரதீய ஜனதாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து மோடி அரசு அமைப்போம் என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் எழுச்சி காணப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் தமிழகத்தில் 1 லட்சம் புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர்.
நாங்கள் பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையில் நல்ல கூட்டணி அமைப்போம். எங்கள் கூட்டணியில் மற்றவர்கள் சேர்ந்தால் பலம். சேராவிட்டால் பலவீனம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட தலைவர் முத்தண்ணசாமி, மாநில பிரசார அணி துணைத்தலைவர் சசிராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top