புதுடெல்லி, பிப். 19-

வி.வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக இத்தாலிய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து 12 அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது.
ரூ.3600 கோடி வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல்: தொழிலதிபரின் ஜாமின் மனு தள்ளுபடி
ரூ.3600 கோடி விலையில் வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டரை பெற இடைத்தரகர்களுக்கு ரூ.360 கோடி லஞ்சம் கொடுத்ததாக பின்மெக்கானிக்கா நிறுவனத் தலைவர் கியூசெப்பி ஆர்சி மீது இத்தாலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.360 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரத்தில் இந்தியர்களுக்கும் பெரும் பங்கு கிடைத்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இந்த லஞ்சப் பணத்தை ஹவாலா முறையில் கைமாற்ற இந்திய அதிகாரிகளுக்கு உதவியதாக பிரபல தொழிலதிபரும், இந்த ஹெலிகாப்டர் கொள்முதல் பேரத்தில் இடைத்தரகராக இருந்து செயல்பட்டவருமான கவுதம் கெய்த்தான் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு துறை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி கைது செய்து, நீதி மன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என விசாரணை நீதி மன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை ஜாமினில் விடுவிக்க டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.பி.வைஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ’இந்த பரிவர்த்தனை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட செல்வாக்கு மிக்க புள்ளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் எனது கட்சிக்காரரை கைது செய்து 3 மாதங்களாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, அவரை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும்’ என்று வாதாடினார்.

ஜாமினில் விடுவிக்க கூடாது என்று பொருளாதார குற்றப்பிரிவு துறையின் சார்பில் ஆஜராகி அவருக்கு எதிராக வாதாடிய வக்கீல், ‘இந்த லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்தான் முக்கியப் புள்ளியாக இருந்து, அனைத்து வகை பணப்பரிமாற்றத்தையும் செய்துள்ளார். இந்த லஞ்சப் பணத்தில் இருந்து ஒரு பெரிய தொகையை தனது பங்காக இவர் பெற்றும் உள்ளார்.

தற்போது, இது தொடர்பான எங்களது விசாரணை முக்கியக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ள நிலையில் இவரை விடுவித்தால், ஆதாரங்களை அழித்து, சாட்சிகளை கலைத்தும் விடுவார். எனவே, இவரை ஜாமினில் விடுதலை செய்தால் வழக்கின் பாதையே திசை திரும்பிவிடும்’ என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதி, கவுதம் கெய்த்தானின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

மேற்கொண்டு, பொருளாதார குற்றப்பிரிவு துறையினர் நடத்திவரும் விசாரணையை விரைவாக முடித்துக் கொள்ள வேண்டும். இவ்விசாரணை முடிந்ததும், கவுதம் கெய்த்தான் புதிதாக ஜாமின் மனு தாக்கல் செய்து சட்டபூர்வமான நிவாரணம் பெற முயற்சிக்கலாம் என்று அவர் தீர்ப்பளித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top