தி டிரமாடிக் டிகேட்: தி இந்திரா காந்தி இயர்ஸ்' என்ற தனது நூலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலைப் பிரகடனம் குறித்து விவாதித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி | கோப்புப் படம்
"1975-ஆம் ஆண்டின் நெருக்கடி நிலைப் பிரகடனம் தவிர்க்க முடிந்த ஒரு நிகழ்வே, காங்கிரஸ் கட்சியும், இந்திரா காந்தியும் இதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிப்படை உரிமைகள் மறுப்பு, அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்கியது, பெரிய அளவில் கைதுகள் மற்றும் ஊடகங்களின் மீதான சென்சார் தடைகள் பொதுமக்களை வெகுவாக பாதித்தது" என்று பிரணாப் முகர்ஜி தனது நூலில் விமர்சனம் செய்துள்ளார்.

அந்தக் காலக்கட்டத்தில் இந்திரா காந்தி அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்தார் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தியின் இந்த ஆதிக்கவாத செயல்பாட்டை விமர்சித்துள்ளதோடு, ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான எதிர்க்கட்சியும் திக்கற்ற வழியில் சென்றது என்று சாடியுள்ளார்.

நெருக்கடி நிலை சட்டத்தை கொண்டு வருவதற்கான இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் பற்றி இந்திரா காந்திக்கு தெரியாது என்று கூறியுள்ள பிரணாப், சித்தார்த்த சங்கர் ரே இந்திராவின் இந்த முடிவுக்கு பெரும் காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

சித்தார்த்த சங்கர் ரே மேற்குவங்க மாநில முதல்வராக இருந்த போது ஷா கமிஷன் முன்பு நெருக்கடி நிலையைக் கொண்டு வருவதில் தனக்கு இருந்த பங்கை முற்றிலும் மறுத்தார் என்று பிரணாப் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தனது 79-வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரணாப் முகர்ஜி தனது நூல் குறித்து கூறும் போது, “இது 3 தொடர் வரிசை நூல்களில் முதல் நூலாகும். இந்த நூலில் 1969-ஆம் ஆண்டு முதல் 1980-ஆம் ஆண்டு வரையிலான விவகாரங்களை விவாதித்துள்ளேன். இரண்டாம் பாகத்தில் 1980-1998-ஆம் ஆண்டுகளின் அரசியல் விவகாரங்களை விவாதிக்க முடிவு செய்துள்ளேன். பிறகு 1998-2012 பற்றி 3-ஆம் பாகத்தில் எழுத திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தொலைதூர மற்றும் ஆழமான தாக்கங்கள் பற்றி அமைச்சரவையில் இருந்த எங்களுக்கு அவ்வளவாக அப்போது தெரியவில்லை என்று பிரணாப் முகர்ஜி மேலும் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top