ஆக்ரா மதமாற்ற சம்பவம் தொடர்பாக இன்று எதிர்கட்சிகள் மக்களவையில் கொதித்து எழுந்தனர். மதவாதத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது என்று அவர்கள் கடும் குற்றச்சாட்டை எழுப்பினர்.
ஆக்ரா மதமாற்ற சம்பவத்தை அடுத்து எதிர்கட்சிகள் இன்று மத்திய அரசின் மீது கடும் விமர்சனங்களை வைக்க வெங்கைய நாயுடு அதற்கு பதில் அளித்தார். | கோப்புப் படம்.
இது தொடர்பாக இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்த போதிலும், நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கைய நாயுடு, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் எதிர்கட்சியினர் தவறான தகவலைப் பரப்பி மோடி அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது அவதூறு செய்வதாக எதிர்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆக்ராவில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்ததையடுத்து இன்று மக்களவை நிகழ்ச்சிகள் எதிர்கட்சிகள் அமளியால் பாதிக்கப்பட்டது.

வெங்கைய நாயுடு பதில் அளிக்கும் போது, “சில மக்களுக்கு ‘இந்து’என்ற வார்த்தை மீதே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. எனவேதான் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். எந்த மாநிலத்தில் எது நடந்தாலும் உடனே ஆர்.எஸ்.எஸ். அல்லது மத்திய அரசு மீது குற்றங்களைக் கண்டுபிடிக்கின்றனர்” என்றார்.

மேலும், ஆக்ரா விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இது உத்திரபிரதேச மாநிலத்தின் பிரச்சினை, உள்ளூர் நிர்வாகமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜார்கண்ட் பிரச்சாரத்திற்குச் சென்றதால் வெங்கைய நாயுடு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

“நாம் கொஞ்சம் நிதானித்து யோசிப்போம், மதமாற்றத் தடைச்சட்டம் மாநிலங்களிலும் மத்தியிலும் இருக்கவேண்டும். எனவே அனைத்து மத நம்பிக்கைகளும், நடைமுறைகளும் பாதுகாக்கப்படும். நாம் இது குறித்து தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

நாம் அனைவரும் ஒரு மக்கள், ஒருநாடு, மதச்சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை நாம் மதிக்கிறோம். இந்தக் கொள்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று கூறிய நாயுடு, எதிர்கட்சியினரை நோக்கி, “நாடு பிரிந்ததற்கு எந்தக் கட்சி காரணம்?” என்றார்.

மேலும், இந்து என்ற வார்த்தையை பாஜக கண்டுபிடிக்கவில்லை என்றார். 

“எதிர்கட்சியினர் ஆர்.எஸ்.எஸ். பற்றி நிறைய விமர்சனங்களை வைக்கின்றனர். என்ன தொடர்பு? ஆர்.எஸ்.எஸ் ஒரு மகத்தான அமைப்பு. அது ஒரு சமூக அமைப்பு, ஆர்.எஸ்.எஸ் பின்னணி எனக்கு இருப்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன். எங்களுடைய தாய் அமைப்பின் மீது அவர்கள் குற்றம்சாட்டும்போது நாம் எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்?” என்றார் வெங்கைய நாயுடு.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜோதிட நிபுணரைச் சென்று பார்த்ததை எதிர்கட்சிகள் கேலி பேசியது குறித்து கூறிய நாயுடு, “ஸ்மிருதி ஒரு நல்ல மனிதர், அவரை அனைவரும் பாராட்டுகின்றனர். ஆனால் நீங்கள் அவர் ஏன் ஜோதிடரைப் பார்க்கச் சென்றார் என்று கேட்கிறீர்கள். இதில் என்ன பிரச்சினை? அனைவரும் ஜோதிடரைப் பார்க்கவேண்டும் என்று சுற்றறிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அவரை ஏன் அனாவசியமாக வசை செய்ய வேண்டும்? 

மத வன்முறை குறித்து நீங்கள் தவறு என்று நிரூபிக்கப்பட்டீர்கள், சமஸ்கிருத மொழி விவகாரத்திலும் அப்படியே” என்று கூறினார் வெங்கைய நாயுடு

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top