அபுதாபி, நவ.23- 

பார்முலா1 கார்பந்தயத்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி சுற்று போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. 

கார் பந்தயங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது பார்முலா-1 வகை கார்பந்தயம். மொத்தம் 19 சுற்றுகளை கொண்ட இந்த ஆண்டுக்கான பந்தயம் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. 
பார்முலா1 கார்பந்தயத்தில் மகுடம் சூடப்போவது யார்?: கடைசி சுற்று அபுதாபியில் இன்று நடக்கிறது
இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். 18 சுற்று முடிவில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன்(மெர்சிடஸ் அணி) 334 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் (இவரும் மெர்சிடஸ் அணி) 317 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருக்கிறார்கள். மற்ற அனைவரும் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து விட்டனர். ஏமாற்றம் அடைந்தவர்களின் பட்டியலில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டலும்(159 புள்ளி) அடங்குவார். 

ஹாமில்டன், ராஸ்பெர்க் ஆகியோரில் யாருக்கு உலக பார்முலா1 மகுடம் என்பது 19-வது மற்றும் கடைசி சுற்று பந்தயமான அபுதாபி கிராண்ட்பிரி போட்டி நிர்ணயம் செய்யும். இந்த பந்தயம் அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் இன்று நடைபெறுகிறது. 

முதல் 18 சுற்றுகளில் ஒவ்வொரு சுற்று போட்டியிலும் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால் கடைசி சுற்றில் புள்ளி விஷயத்தில் புதுமை பின்பற்றப்படுகிறது. இந்த ஒரு ரவுண்டில் மட்டும் புள்ளி இரண்டு மடங்காக வழங்கப்படும். அதாவது வெற்றி பெறுபவருக்கு 50 புள்ளிகள், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு 36 புள்ளிகள், 3-வது இடத்தை பிடிப்பவருக்கு 30 புள்ளிகள் வீதம் கொடுக்கப்படும். 

வழக்கமான புள்ளி முறைப்படி நடந்திருந்தால் தற்போது ராஸ்பெர்க்கை விட 17 புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கும் 29 வயதான ஹாமில்டன் 2-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகியிருக்கும். 

ஆனால் இரண்டு மடங்கு புள்ளி முறை அறிமுகத்தால் கடைசி பந்தயம் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அபுதாபி பந்தயத்தில் ராஸ்பெர்க் முதலிடத்தை பிடித்தால் ஹாமில்டன் 2-வதாக வந்தால் மட்டுமே பட்டத்தை வெல்ல முடியும். மாறாக ஹாமில்டன் 5-வதாக வந்தால், ராஸ்பெர்க் முதலாவதாக வரக்கூடாது. ஹாமில்டன் 8-வது இடத்திற்கு பின்தங்கினால் அவரது எதிராளி முதல் 3 இடங்களை நெருங்கக்கூடாது. 

ராஸ்பெர்க்கின் பட்டம் வெல்லும் வாய்ப்பு எப்படி என்றால் கடைசி சுற்றில் அவர் வெற்றி பெற்றால், ஹாமில்டன் 3 -வதோ அல்லது அதற்கு கீழோ இறங்க வேண்டும். 2-வது இடத்தை பிடித்தால் ஹாமில்டன் 6-வது இடத்திற்கு கீழாக செல்ல வேண்டும். 3-வதாக ராஸ்பெர்க் வந்தால், ஹாமில்டன் 7-வது இடத்திற்கு கீழ் பின்தங்க வேண்டும். இந்த சீசனில் ஹாமில்டன் 10 ஆட்டங்களிலும், ராஸ்பெர்க் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அபுதாபி பந்தயத்தின் ஒரு சுற்று தூரம் 5.554 கிலோ மீட்டர் ஆகும். ஓடுதளத்தை மொத்தம் 55 முறை சுற்றி வர வேண்டும். அதாவது போட்டிக்கான இலக்கு 305.470 கிலோ மீட்டர் ஆகும். 

முன்னதாக நேற்று தகுதி சுற்று நடந்தது. இதில் சுற்றை 1 நிமிடம் 40.480 வினாடிகளில் மின்னல் வேகத்தில் கடந்து நிகோ ராஸ்பெர்க் வெற்றி பெற்றார். 1 நிமிடம் 40.866 வினாடியில் இலக்கை எட்டிய ஹாமில்டன் 2-வது இடத்தை பிடித்தார். 

இதன் மூலம் இன்றைய பிரதான ரேசில் 29 வயதான ராஸ்பெர்க் முதல் வரிசையில் இருந்தும், ஹாமில்டன் 2-வது வரிசையில் இருந்தும் புறப்படுவார்கள். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top