படோர்டா, நவ.23- 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் புனே அணியை வீழ்த்தி கோவா 3-வது வெற்றியை பதிவு செய்தது. 
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புனே அணியை வீழ்த்தியது கோவா
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் நேற்றிரவு படோர்டா நேரு ஸ்டேடியத்தில் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-எப்.சி.புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 5-வது நிமிடத்தில் கோல் போட்டது. ஆந்த்ரே சான்டோஸ் கோலை நோக்கி அடித்த பிரிகிக்கை ரோமியோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி லாவகமாக கோலாக்கினார். இதனால் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

பதிலடி கொடுக்க முயற்சித்த புனே அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. 78-வது நிமிடத்தில் புனேயின் நட்சத்திர வீரர் கேட்சோரனிஸ் அடித்த ஷாட் கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. பிறகு புனே கேப்டன் புருனோ சிரிலோ மீண்டும் உதைத்த போது அப்போதும் பந்து கம்பத்தில் பட்டு நழுவிப் போனது. 

கடைசி நிமிடத்தில் கோவா இன்னொரு கோலை திணித்தது. கோவா வீரர் மிரான்டா தலையால் முட்டிக் கொடுத்த பந்தை, சக மாற்று வீரர் மிரோஸ்லாவ் ஸ்லிபிக்கா தலையால் முட்டி கோல் வலைக்குள் திருப்பினார். 

முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனேயை தோற்கடித்தது. 10-வது லீக்கில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் புனே அணிக்கு இது 4-வது தோல்வியாகும். 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. -சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் கோல் எதுவும் இன்றி ‘டிரா’ கண்டது. 

சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை பந்தாடி இருந்தது. அதற்கு பழிதீர்க்க மும்பை அணி வரிந்து கட்டும். என்றாலும் 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி தாக்குதல் ஆட்டத்திலும், தடுப்பு ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. எனவே சென்னை அணியை, மும்பை சிட்டி எப்.சி. அணி வீழ்த்துவது என்பது சவாலான விஷயமாகும். 

இதற்கிடையே நேற்று முன்தினம் கேரளா பிளாஸ்டர்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி கடைசி நிமிடத்தில் அடித்த கோல், அதற்குரிய லைனை கடந்த போதிலும் அது கோல் அல்ல என்று உதவி நடுவர் அறிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது சரியான கோல் தான் என்பதற்கான வீடியோ ஆதாரங்களுடன் கொல்கத்தா அணி நிர்வாகம் இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிய காத்திருப்பதாக கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரான உத்சவ் பரேக் தெரிவித்தார். 

நடுவரின் தவறான தீர்ப்பால் கொல்கத்தா அணி 1-2 என்ற கோல் கணக்கில் கேரளாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top