புது டெல்லி, நவ.23-

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய விலை சிலிண்டர்களை அதே விலைக்கு பணக்காரர்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
பணக்காரர்களுக்கு இனி மானிய விலை சிலிண்டர் கிடையாது: விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
தலைநகர் டெல்லியில் ஒரு செய்தி நிறுவனத்தின் நேர்காணல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற அருண் ஜெட்லி, ’என்னைப் போன்றவர்களும், உங்களைப் போன்றவர்களும் மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்களை வாங்கிக் கொண்டிருப்பதால், மத்திய பட்ஜெட்டில் எவ்வளவு பெரிய நிதிச்சுமை ஏற்படுகின்றது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதனால், பற்றாக்குறை பட்ஜெட் போடும் நிலை ஏற்படுகின்றது. என்னைப் போன்ற நபர்களுக்கு மானியம் பெறும் தகுதி இல்லை என்னும் நிலையில், எனக்கு மானியம் வழங்க வாங்கப்படும் கடன் தொகையானது, அடுத்த தலைமுறையினருக்கு பெரிய கடன் சுமையாகி விடும். இதைப் போன்ற பொருளாதாரம் ஒரு பொறிக்குள் பிடிபட்ட நிலையில் இந்த நாட்டை முடக்கிவிடும்.

அடையாளம் காணப்படாத பிரிவினருக்கு, உறுதிசெய்யப்படுத்தாத ஒரு தொகையை மானியமாக கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. மானியம் என்பது அடையாளம் காணப்பட்ட ஒரு பிரிவினருக்கு அளிக்கப்படும் அளவிடப்பட்ட தொகையாக இருத்தல் வேண்டும்.

மானியங்களின் பலன்கள் அடையாளம் காணப்படாத பிரிவினரையும் சென்றடைவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை அரசு சந்தித்துக் கொண்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

அவரது இந்த பேட்டியை வைத்து பார்க்கும்போது, மானிய சிலிண்டர்களை பெறுவதற்கு ஒரு அதிகபட்ச வருமான வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும், இனி பணக்காரர்களுக்கு மானிய விலை சிலிண்டர் கிடையாது என எதிர்வரும் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top