கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக வாத்து முட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர, அம்மாநில அரசு தடை விதித்துள்ளதால் தேனி மாவட்டத்தில் 2 லட்சம் முட்டைகள் தேங்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் முதல்போக நெல் சாகுபடி முடிந்தது. இரண்டாம் போக சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து, சுமார் 80 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் வாத்து மேய்ச்சலுக்காக தேனி, வீரபாண்டி, சின்னமனூர், கம்பம் ஆகிய பகுதிகளில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். இவர்கள் கொண்டுவந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை, நெல் அறுவடை செய்த வயல்களில் மேய விட்டுள்ளனர்.
இந்த மேய்ச்சலுக்காக ஊர்த் தலைவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி உள்ளனர். மேய்ச்சலுக்குப் பின் பட்டியில் அடைக்கப்படும் வாத்துகள், தினந்தோறும் இட்டுவரும் முட்டைகளை தொழிலாளர்கள் சேகரித்து தங்களது கூடங்களில் வைத்துள்ளனர்.
2 லட்சம் முட்டைகள் தேக்கம்
இவர்களிடம் பண்ணை உரிமையாளர்கள் முட்டைகளை வாங்கிச் சென்று குடோன்களில் வைத்து வருகின்றனர்.
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், வாத்து மற்றும் அதன் முட்டைகளை விற்பனைக்காக கொண்டுவர அம்மாநில அரசு கடந்த வாரம் தடை விதித்தது. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் முட்டைகள் குடோன்களில் தேங்கியுள்ளன. இது குறித்து ‘தி இந்து’விடம் லால்குடியைச் சேர்ந்த தங்கதுரை கூறும்போது,
“கேரளத்தில் வாத்து முட்டைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதனால் மேய்ச்சலுக்காக தேனி மாவட்டம் வந்துள்ளோம். ஆனால், கேரள அரசு வாத்து முட்டைக்கு தடை விதித்து விட்டதால், முட்டைகளை அங்கு அனுப்ப முடியவில்லை தேனி, கம்பம் பகுதியில் வாடகைக்கு குடோன் பிடித்து முட்டைகளை தேக்கி வருகிறோம். முட்டைகள் தண்ணீர் படாமல் இருந்தால் 10 நாட்கள் வரை தாக்கு பிடிக்கும். தமிழக மக்கள் அதிகமாக வாத்து முட்டையை விரும்பி சாப்பிடுவதில்லை, இன்னும் ஓரிரு நாட்களுக்குள், முட்டைகளை விற்பனை செய்யாவிட்டால் அவை கெட்டு போய் விடும். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும்” என்றார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top