தமிழகத்தில் இயங்கிவரும் வாடகைக் கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

'உபர்' டாக்ஸி சம்பவத்தையடுத்து, நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார் சேவைகளைத் தடை செய்யுமாறு இந்திய உள்துறை அமைச்சர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.உபர் கார் சம்பவம் வாடகை வாகன பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இயங்கிவரும் வாடகைக் கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாடகைக் கார் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
இந்த வாடகைக் கார் நிறுவனங்கள் அனைத்துமே, சொந்தமாக கார் வைத்திருக்கும் தனி நபரைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிரித்து அனுப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன.
என்டிஎல், ஃபாஸ்ட்ராக் போன்ற நிறுவனங்கள், இந்த கார்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொறுத்துவதை கட்டாயமாக்கியிருக்கின்றன. சில நிறுவனங்கள் ஆபத்துக் காலத்தில் அழைப்பதற்கென எண்களை மட்டும் அளிக்கின்றன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தங்கள் வாகனங்களில் ஆபத்துக் காலத்தில் அழுத்துவதற்கான பொத்தான்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக பல மாவட்டங்களில் இயங்கிவரும் என்டிஎல் நிறுவனத்தின் இயக்குனர் எம்.சி. பரத்குமார் தெரிவித்தார்.
இம்மாதிரி வாடகைக்கார் நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வாடகைக்கு பிடித்து அலுவலகம் சென்றுவரும் தகவல்தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவரிடம் இம்மாதிரி கார்களில் இருக்கும் பாதுகாப்புக் குறித்துக் கேட்டபோது, ஒவ்வொரு ஓட்டுனரும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வது தனக்கு அச்சத்தைத் தந்ததாகவும், ஆனால், யாரும் இதுவரை மோசமாக நடந்துகொண்டதில்லை என்று தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமானால், மொபைல் ஆப்ளிகேஷன்கள் மூலம் இயங்கும் சேவைகளைத் தடைசெய்ய வேண்டுமென்கிறார் பரத்குமார்.
காரணம், இம்மாதிரி சேவைகளில் அந்தக் கார்கள் மொபைல் போன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், அது பாதுகாப்பற்றது என்றும் தெரிவிக்கிறார் பரத்.
தில்லியில் நடந்திருக்கும் இந்த பாலியல் பலாத்கார சம்பவம், தமிழகத்தில் இம்மாதிரி வாடகை வாகனங்களைப் பயன்படுத்துபவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், கால் டாக்ஸி நிறுவனங்கள் எல்லாக் கார்களிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
மொபைல் ஆப் மூலம் இயங்கும் ஊபர் போன்ற நிறுவனங்கள் சென்னையிலும் இயங்கிவரும் நிலையில், தமிழக காவல்துறை இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top