2012 டிசம்பர் 16-ம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
சிகிச்சைகாக அரசு செலவில் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.கோப்புப் படம்: வி.சுதர்சன்
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
குறிப்பாக மாணவ சமுதாயத்தினர் போராட்டம் குடியரசுத் தலைவர் மாளிகை பிரதான வாயிலை உலுக்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்ட மசோதா மட்டுமே போதுமா என்ற வகையில் டெல்லியில் கடந்த வாரம் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டெல்லியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாடகை காரில் தனியாக வீடு திரும்பிய தனியார் நிதி நிறுவனத் தில் பணியாற்றும் 27 வயது இளம் பெண், கார் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கார் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ‘உபேர் கால் டாக்ஸி’ நிறுவனத்தை டெல்லி அரசு தடை செய்துள்ளது. டெல்லியில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளில் ஈடுபட அந்நிறுவனத்துக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும், டெல்லி சம்பவத்துக்குப் பிறகு வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் அதிகப்படியான கெடுபிடிகள் கடைபிடிக்கப்படுவதாக டெல்லி அரசும், காவல்துறையும் கூறிவந்தது கேள்விக்குள்ளாகிறது.
கைதான ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ், ஏற்கெனவே இன்னொரு பலாத்கார வழக்கில் கைதானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது போக்குவரத்து துறையும், சட்ட அமலாக்கப்பிரிவும் இணைந்து செயல்படத் தவறியதையே காட்டுகிறது. 2012 டெல்லி சம்பவத்திற்குப் பிறகு பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த உஷா மெஹ்ரா ஆணையமும், போக்குவரத்து துறையும், சட்ட அமலாக்கப்பிரிவும் இணைந்து செயல்பட்டால் குற்றப் பின்னணி உடைய ஓட்டுநர்களை அடையாளம் காண முடியும் என பரிந்துரைந்துரைத்திருந்தது. அப்படி இருந்தும் இத்தகைய சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் சில பரிந்துரைகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று, பொது போக்குவரத்து வாகனங்களை டெல்லி மாநில அரசு அதிகரிக்கலாம். அரசு பேருந்துகள் தவிர்த்து டாக்ஸி, ஆட்டோக்களையும் பொது போக்குவரத்து வாகங்களாக இயக்கலாம். பொது போக்குவரத்து வாகனங்களில் சிசிடிவி கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தலாம் என தெரிவித்தது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த அரசு அமைப்புகள், 3,500 ரேடியோ டாக்ஸிகள், 3,684 பட்ஜெட் ரேடியோ டாக்ஸிகள், 6879 மஞ்சள் நிற டாக்ஸிகளுக்கும், 78,105 கருப்பு நிற டாக்ஸிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிமங்கள் வழங்குவதில் மிகக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி போலீஸாரும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் சேர்ந்து ஒரு பொதுவெளியை உருவாக்கி அதன் மூலம் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை மட்டுமாவது சந்தித்து முக்கிய தகவல்களை பறிமாறிக் கொள்ளவேண்டும் என்ற பரிந்துரையும் அந்த் அறிக்கையில் இருக்கிறது.
ஆனால், அரசு தரப்பில் கூறப்பட்ட பாதுகாப்பு, கண்காணிப்பு ஏற்பாடுகளாக இருக்கட்டும், இல்லை விசாரணை ஆணையம் தரப்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளாகட்டும் அனைத்துமே காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன.
டிசம்பர் 16 சம்பவத்திலிருந்து எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top