தமிழர்கள் இந்தியில் பட்டம் பெறுவதில் ஆர்வம் காட்டாததால், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் இதர மாநிலத்தவரே 99 சதவீதம் பேர் பணியாற்றுகின்றனர் என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் சலீம் பேக் பேசினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்தி துறை சார்பில் இந்தி மொழி கற்பித்தலின் நுணுக்கமும், அதன் பயன்களும் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பேசியது: தமிழகத்திலேயே 2-வது கல்லூரியாக அமெரிக்கன் கல்லூரியில் இந்தியில் பி.ஏ. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இப்படிப்பை முடித்தால், தேசிய அளவில் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்ற விழிப்புணர்வு இன்னும் ஏற்படாததால், மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த நிலை நிச்சயம் மாறும் என்றார்.
காந்திகிராமம் பல்கலை. இந்தி துறை தலைவர் சலீம் பேக் இந்தி மொழியின் ஆற்றல் மற்றும் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
அலிகார் முஸ்லிம் பல்கலை. இந்தி பேராசிரியர் சாகுல் அமீது பேசியது: தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பல்கலை., கல்லூரியிலுள்ள இந்தி பேராசிரியர் பணியிடங்களில் உள்ள இந்தி துறையில் 1 சதவீதத்துக்கும் குறைவான தமிழர்களே பணியாற்றுகின்றனர். மற்ற பணியிடங்கள் அனைத்திலும் கேரளம், ஆந்திரம், கர்நாடகத்தவரே பணியாற்றுகின்றனர்.
இந்தி மேல் உள்ள வெறுப்பு, வேலைவாய்ப்பு குறைவு என்ற தவறான எண்ணம், போதிய விழிப்புணர்வு இன்மையால் தமிழர்கள் இந்த வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். எம்ஏ., பிஎச்டி. பட்டங்களை இந்தியில் பெற்றால் மத்திய அரசு அலுவலகத்தில் எளிதாக பணி கிடைக்கும். இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் திறனுடையவர்கள் மிக குறைவாக உள்ளனர்.
இந்தி படித்தால் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் இந்த பணியிடத்தில் எளிதில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்தி தர பள்ளிகளிலிருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கல்லூரி இந்தி துறை தலைவர் சப்ரம்மா, நிதி காப்பாளர் ஹெலன் ரத்தின மோனிகா, துணை முதல்வர் ஆபிரகாம், மதுரை கல்லூரி பேராசிரியர் முரளி, பேராசிரியர்கள் சுப்புராமன், ஜெகன்னாதரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top