சேலம், நவ. 27–
சேலம் மாநகராட்சியில் இன்று காலை மாநகராட்சி இயல்பு கூட்டம் நடந்தது. மேயர் சவுண்டப்பன் தலைமை வகித்தார். ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார்.
பின்னர் அவசர தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பிறகு கவுன்சிலர்கள் பேசினர். அப்போது துணை மேயர் நடேசன் எழுந்து, அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 வருடங்கள் செய்த சாதனைகள் குறித்தும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செய்த பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார்.
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க-தி.மு.க. கவுன்சிலர்கள் அடிதடிஅப்போது 10–வது டிவிசன் தி.மு.க. கவுன்சிலர் தெய்வலிங்கம் எழுந்து, துணை மேயர் நடேசன் மன்ற கூட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசுகிறார், இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தொடர்ந்து பேசினார்.
இதனால் கோபம் அடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் எழுந்து கவுன்சிலர் தெய்வலிங்கத்தை அமர கூறி சத்தம் போட்டனர். ஆனால் தொடர்ந்து அவர் பேசினார். இதனால் மேலும் கோபம் அடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் எழுந்து மேலும் சத்தம் போட்டனர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் பதிலுக்கு சத்தம் போட்டனர். இதனால் மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சில அ.தி.மு.க. கவுன்சிலர் சிலர் குடிநீர் பாட்டிலை எடுத்து தெய்வலிங்கம் மீது வீசினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பதிலுக்கு தெய்வலிங்கம் சத்தம் போட்டு பேசினார். இதில் கோபம் அடைந்த சில அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அவரை தாக்க முயன்றனர். இவர்களை மாநகராட்சி எதிர்கட்சி தலைவி புவனேஸ்வரி முரளி வந்து தடுத்தார்.
இவரை சிலர் பிடித்து கீழே தள்ளினர். அப்போது கவுன்சிலர் தெய்வலிங்கம் அணிந்து இருந்த கண்ணாடியை சிலர் பறித்து அதை கீழே வீசி அவரை தாக்கினர். பின்னர் அவரை தள்ளிக்கொண்டு வெளியே வந்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் சரளா குணசேகரன், முருகன், தாஜூதீன், செல்வி, விஜயா ராமலிங்கம், மாதையன், கபீர் ஆகியோர் புவனேஸ்வரி முரளி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் அனைவரும் நெற்றியில் நாமம் போட்டு கொண்டு வந்து இருந்தனர்.
பின்னர் தெய்வலிங்கம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசாமல் அதி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களது கட்சி தலைவி பற்றி பேசினார்கள். இதை தட்டி கேட்டேன். இதனால் என்னை தாக்கி பிடித்து வெளியில் தள்ளி உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? என கேட்டால் தண்ணீர் பாட்டில், மிக்சர் பொட்டலம் ஆகியவற்றால் என்னை தாக்கினர். அனைவரும் என்னை நாயே, பேயே என ஒருமையில் திட்டி உள்ளனர். அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய கவுன்சிலர்கள் இப்படியா நடந்து கொள்வது. எங்களை எப்படி விரட்டி விட்டாலும் நாங்கள் மக்களுக்காக போராடுவோம். மக்கள் பிரச்சினைகளை எடுத்து கூறுவோம்,
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவி புவனேஸ்வரி முரளி கூறியதாவது:–
தி.மு.க. கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இன்று நாங்கள் நாமம் போட்டு வந்தோம். ஆனால் கவுன்சிலர் தெய்வலிங்கத்தை தாக்கி வெளியே தள்ளி விட்டு உள்ளனர். மற்ற தி.மு.க. கவுன்சிலர்களை பேச விடாமல் செய்து வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வினர் வெளி நடப்பு செய்த பின்னரும் மன்ற கூட்டம் நடந்தது. அப்போது பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் எழுந்து அ.தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தந்து வருகிறது. துணை மேயர் நடேசன் மாநகராட்சியில் செய்த பணிகள் குறித்து பேசும்போது வேண்டும் என்றே அவரது பேச்சை தடுத்த கவுன்சிலர் தெய்வலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இவர்களை மேயர் சவுண்டப்பன் சமாதானம் செய்தார். பின்னர் கவுன்சிலர் தெய்வலிங்கம் 3 மாநகராட்சி கூட்டத்திற்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தி.மு.கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தொங்கும் பூங்கா பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top