அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப் பவர்களுக்கான நேர்காணல் 30 நிமிடங்களுக்குள் முடியும்படி நடைமுறைகள் எளிதாக்கப்பட் டுள்ளன என்று சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக விசா பிரிவு தலைமை அதிகாரி லாரன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று சென்னையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் சுற்றுலாவுக்காக அமெரிக்காவுக்கு செல்கின்றனர். தற்போது ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்று வருகின்றனர். இங்கிருந்து அமெரிக்காவில் வேலைக்காக செல்பவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் எச்-1பி விசாக்களில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் மட்டும் கடந்த ஆண்டு 25 சதவீதம் விசாக்கள் வழங்கப்பட்டன. சென்னையில் உள்ள தூதரகத்தில் நாள் ஒன்றுக்கு 1,100 பேருக்கு விசாக்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு எளிதான முறையில் விசா வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, விசா பெற விண்ணப்பிக்க தேனாம்பேட்டையில் உள்ள விசா விண்ணப்ப மையத்தில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகையை பதிவு செய்துவிட்டு, நேர்காணலுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
அனுமதி அளிக்கப்பட்ட நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக தூதரகத்துக்கு வந்தால் போதும். பல மணி நேரங்களுக்கு முன்பாக வந்து காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், தூதரகத்துக்கு வந்தவுடன் 30 நிமிடங்களுக்குள் நேர்காணலை முடித்துவிட்டு அடுத்தநாளே விசா வழங்கப்படும்.
மேலும், ஒருமுறை வேலைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பியவர்கள், மீண்டும் அதே காரணத்துக்காக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தால் விசா பெற நேர்காணலுக்கு வரத் தேவையில்லை. அவர்கள் தங்களுடைய விசாவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை விசா விண்ணப்ப மையத்தில் உள்ள பெட்டியில் போட்டால் போதும். அதேபோல், 14 வயதுக்கு உட்பட்டவர்களும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் விசா வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு நேர்காணல் மற்றும் கைரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் கடந்த 2013, அக்.1-ம் தேதி முதல் 2014 செப்.30-ம் தேதி வரை 21 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக்கான விசாவும், 40 ஆயிரம் பேருக்கு வேலைக்கான விசாவும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு லாரன்ஸ் மேயர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top