சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மீதான தவறான படிமம் ஓரளவுக்கு அகலுமாறு சில ஆட்டோ ஓட்டுநர்கள் சமுதாய நல்லுணர்வுடன் செயல்படுகின்றனர்.
ஆட்டோராஜா சங்கத்தின் திருவான்மியூர் உறுப்பினர்கள். | படம்: எம்.கருணாகரன்.
ஆட்டோராஜா அமைப்பைச் சேர்ந்த பி.ஜெயக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படும் ஆபத்தை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார்.

காரணம், அவரது மகன், விபத்துக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கியுள்ளார்.. தன் மகனுக்கு ஏற்பட்ட விபத்து பற்றி அவர் கூறும்போது, “பணியிலிருந்து என் மகன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று மோத, முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டது. அன்று என் மகனின் வண்டி மீது மோதிய அந்த நபர் குடித்திருக்காவிட்டால் இன்று என் மகன் சக்கர நாற்காலியில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.” என்றார்.

இவர் தனது பயணிகளிடத்திலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதலின் ஆபத்தை விளக்குவதோடு, விபத்தில் முடங்கியவர்களுக்கும் ஆறுதல் அளித்துப் பேசி வருவதாக தெரிவித்தார்.

மற்றொரு ஓட்டுநரான பி.ரகுபதி, தனது வாடிக்கையாளர்களுக்கு திருக்குறள் வாக்கியங்களை அர்த்தத்துடன் வாசித்துக் காட்டுவதாகவும், இலவசமாக குடிநீரும் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

“சமூகத்திற்கு என்னால் முடிந்ததை செய்கிறேன்” என்கிறார் ரகுபதி. இவர் ஆட்டோ ஓட்ட வருவதற்கு முன்பாக திரைப்படத் துறையில் லைட்மேனாகவும் பிறகு பிளம்பர் வேலையும் பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'எனது கிராமத்தில் விவசாயம் பொய்த்துவிட்டது. இதனால் எங்கள் குடும்பத்தின் முக்கிய வாழ்வாதரம் இழக்கப்பட்டது. அவ்வப்போது ஏதாவது வேலை செய்து பிழைத்து வந்த நான் இப்போது ஆட்டோ ஓட்டுநராக நிலைபெற்றுள்ளேன்” என்கிறார். இவர் நாளொன்றுக்கு ரூ.800 வரை சம்பாதிக்கிறார். இதில் குடிநீருக்காக ரூ.30 செலவு செய்து வாடிக்கையாளர்களின் தாகத்தைப் போக்கி வருகிறார்.

ஆட்டோராஜாவைச் சேர்ந்த மற்றொரு ஓட்டுநர் சந்தோஷ் குமார், காலையில் பேக்கிங் குடிநீர் விற்பனை செய்கிறார். மாலை வேளைகளில் ஆட்டோ ஓட்டுகிறார்.

வணிகத்தில் பட்டப்படிப்பு படித்த சந்தோஷ் குமார் ஆட்டோ ஓட்டுதலில் பெற்ற வருமானம் கொண்டே தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளார்.

“இப்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுவதற்கு நேரம் அதிகமாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் எப்படியோ சில மணி நேரங்கள் ஓட்டி வருகிறேன். எனது லட்சியம் என்னவெனில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகும்” என்கிறார் சந்தோஷ் குமார்.

மீட்டரைத் தவறாமல் இயக்கி ஆட்டோ ஓட்டி வரும் இவர்கள், சமூக விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் மீது வாடிக்கையாளர்கள் அன்பு அதிகமாகியுள்ளது

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top