ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் பிரதமர் மோடி உதவினாரா என்று திமுக தலைவர் கருணாநிதி தனது கடிதத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி | கோப்புப் படம்
இதுதொடர்பாக கட்சித் தொண் டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ள தாவது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சசி எண்டர்பிரசஸ் நிறுவனம் கடந்த 1991 முதல் 1993 வரை வருமான வரி செலுத்தவில்லை என்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. 1997-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வரவுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா மற்றும் சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், வருமான வரித்துறையிடம் சமரசம் செய்துகொள்வதாகவும், இதற்காக அபராதத் தொகை கட்டுவதாகவும் கூறி, 1 கோடியே 44 லட்சத்து 43 ஆயிரத்து 61 ரூபாய் அபராதமாக கட்டப்பட்டுள்ளது. இதன் இறுதி உத்தரவை வருமான வரித்துறை இன்னும் பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பலமுறை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மனு தாக்கல் செய்தவர்கள், தற்போது அபராதம் செலுத்த முன்வந்திருப்பது, குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே பொருள்படுகிறது.
இந்தச் சூழலில் வருமான வரி வழக்கு முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குக்காக பல்வேறு நீதிமன்றங்களும் நீதிபதிகளும் அரசு வழக்கறிஞர்களும் பல மணி நேரத்தை செலவு செய்துள்ளனர். அப்படி இருக்கையில் இதற்காக அபராதம் செலுத்தினால் மட்டும் போதுமா?
வாஜ்பாய் ஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, தான் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றதாகவும், அப்போது வருமான வரி வழக்கு குறித்த குறிப்புகளை அவர் ஒரு கவரில் கொடுத்ததாகவும் தனது ‘Confessions Of Swadhesi Reformers’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அந்த வழக்கில் இருந்து விடுபட முடியவில்லை. தற்போது, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து சமரசம் செய்துள்ளனர். இதன்மூலம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஏற்கப்படாத வேண்டுகோள், மோடி காலத்தில் ஏற்கப்பட்டதோ என்று எல்லோர் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top