தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார்.
தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மொத்த மின் தேவையான 91,642 மில்லியன் யூனிட்கள் அளவிலான மின்சாரத்தை பெறுவதற்காக, சொந்த மின் உற்பத்தி, மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள், மரபுசாரா எரிசக்தி மூலமாக பெறப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகே பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
இம்மின்சாரத்தின் கொள்முதல் அளவு நாளுக்கு நாள், மணிக்கு மணி என்று மாறுபடும். தேவையான மின்சாரம் குறைந்த விலை ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் போது, இம் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம் முதலில் நிறுத்தப்படுகிறது என அவர் விளக்கினார்.மின்சார துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன்| கோப்புப் படம்.
பேரவையில் அவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2012-13ல், 67,208 மில்லியன் யூனிட் அளவில் இருந்த மின் தேவை 2013-14ல் 76,445 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 14 சதவீதம் கூடுதலாகும். இதுவே, 2014-15ம் ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் தேவை 91,642 மில்லியன் யூனிட்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதன் முந்தைய ஆண்டைவிட 20 சதவீதம் கூடுதலாகும்.
தமிழ்நாட்டின் மின் தேவையை சொந்த மின் உற்பத்தி மூலமாகவும் மற்றும் மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாகவும் சேர்த்து 70 சதவீத அளவிற்கு பெறப்பட்ட பின்னரே, மீதமுள்ள பற்றாக்குறையை போக்க 30 சதவீத அளவிற்கு பிற ஆதாரங்களிடமிருந்து நிகர மின் தேவையை நிறைவு செய்வதற்காகவே மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
* தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தேவைப்படும் மின்சாரத்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரத்தை முதலில் பெற்று, படிப்படியாக ஏறுமுக வரிசையில் தேவை நிறைவடையும் வரை உயர்ந்த விலை மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இது Merit Order Dispatch என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வரையறுக்கப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் பின்பற்றப்படுகிறது.
* மேற்கண்ட மொத்த மின் தேவையான 91,642 மில்லியன் யூனிட்கள் அளவிலான மின்சாரத்தை பெறுவதற்காக, சொந்த மின் உற்பத்தி மூலமாக 34,253 மில்லியன் யூனிட்கள் பெறப்படுகின்றன (மொத்த மின்தேவையில் 37.38%)
* மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக 30,534 மில்லியன் யூனிட்கள் பெறப்படுகின்றன (மொத்த மின்தேவையில் 33.32%)
* மரபுசாரா எரிசக்தி மூலமாக 6,082 மில்லியன் யூனிட்களும் (மொத்த மின்தேவையில் 6.64%) பெறப்பட்டு வருகிறது. இதில் காற்றாலை மூலம் பெறப்படுவது 4650 மில்லியன் யூனிட். இதற்கான சராசரி கொள்முதல் விலை யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 3.15 ஆகும். இவை நான்கு மாதங்களுக்கு மட்டுமே அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே கிடைக்கும்.
* மேலும், நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதாவது 15 வருட காலத்திற்கு 3330 மெகாவாட் அளவிற்கு கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் சமப்படுத்தப்பட்ட கட்டணம் ரூ. 4.91க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஜின்டால் நிறுவனத்திலிருந்து 150 மெகாவாட்டும், ஓ.பி.ஜி. நிறுவனத்திலிருந்து 74 மெகாவாட் மட்டுமே தற்போது பெறப்படுகிறது. மற்றவை படிப்படியாகப் பெறப்படும்.
* ஓப்பந்தப்புள்ளி இறுதிசெய்யப்பட்ட இதே காலகட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் சமப்படுத்தப்பட்ட கட்டணம் ரூபாய் 4.88 முதல் 5.73 வரை நீண்டகால அடிப்படையில் 25 வருடத்திற்கு மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
* நடுத்தர கால ஒப்பந்த அடிப்படையில் (medium term) 500 மெகாவாட் (யூனிட் ஒன்றிற்கு சமப்படுத்தப்பட்ட கட்டணம் ரூபாய் 4.88 முதல் ரூபாய் 4.99 வரை) பெறப்படுகிறது.
* ஆனால், அதே காலகட்டத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 5.46 என்ற சமப்படுத்தப்பட்ட விலையில் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
* குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் (short term) தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 1393மெகாவாட் (யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 5.50) கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. (இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதால் விலை சற்று அதிகம்)
* மேலும் வெளிமாநில உற்பத்தியாளர்களிடமிருந்து 773 மெகாவாட் யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 4.93 க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் போதுமான வழித்தடமின்மையால் கிடைப்பது 150 மெகாவாட் ஆகும்)
* ஆனால், இதே காலகட்டத்தில் கேரளா மின்வாரியம் யூனிட் ஒன்றிற்கு பூhய் 5.88 விலையில் மின் கொள்முதல் செய்கிறது.
* இது தவிர, உற்பத்தி செய்யும் தனியார் அதாவது ST - CMS, ABAN, penna போன்ற தனியார் மின் மின்உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து (LOW COST IPPS) குறைந்த விலையில் அதாவது யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 4.04 –ல், 2829 மில்லியன் யூனிட்கள் (மொத்த மின் தேவையில் 3.09 சதவீதமாகும்) கொள்முதல் செய்யப்படுகிறது.
* மற்றும் அதிக விலையில் உற்பத்தி செய்யும் GMR, MPCL, SPCL, PP Nallur ஆகிய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து (HIGH COST IPPS) யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 12.50-ல், 2950 மில்லியன் யூனிட்களும் (அதாவது மொத்த மின் தேவையில் 3 சதவீதம் மட்டுமே) கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இதில் எரிபொருளுக்காக மட்டும் அவர்களுக்கு ஆகும் செலவு ரூபாய் 11 ஆகும். இந்த எரிபொருள் செலவு மொத்தமும் ஐ.ஓ.சி. பி.பி.சி.எல். போன்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்குத்தான் செலுத்தப்படுகிறது. நிலையான கட்டணமான (FIXED CHARGES) யூனிட் ஒன்றுக்கு சராசரியாக முதலீட்டிற்கான வட்டி, தேய்மானம், பராமரிப்பு செலவு போன்றவற்றிற்காக ரூபாய் 1.50 மட்டும் அந்த மின் உற்பத்தியாளர்களுக்கு சென்றடைகிறது. ( வாங்கினாலும் சரி வாங்காவிட்டாலும் சரி நிலையான கட்டணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்)
* இந்த மின்சாரம், தொடர்ந்து நிரந்தரமாக கொள்முதல் செய்யப்படுவதில்லை என்றாலும், மிக மிக அவசியமான காலகட்டங்களான பள்ளி/கல்லூரி மாணவர்களின் இரவு நேர படிப்பிற்காகவும், தேர்வு நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் மற்றும் தேவை ஏற்படும் நாட்கள் மற்றும் நேரங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய கொள்முதலானது மற்ற ஆதாரங்களிடமிருந்து முழுமையாக கொள்முதல் செய்யப்பட்ட பிறகே, தேவைக்கேற்ப இம் மின்உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படுகின்றது. இம்மின்சாரத்தின் கொள்முதல் அளவு நாளுக்கு நாள், மணிக்கு மணி என்று மாறுபடும். தேவையான மின்சாரம் குறைந்த விலை ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் போது, இம் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரம் முதலில் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top