கான்பூர் ஐஐடி மாணவர்கள் நான்கு பேர், வளாகத்தேர்வில் தங்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் கிடைக்க வாய்ப்பிருந்தும் அந்த வேலைவாய்ப்புகளைப் புறக்கணித்தனர்.
வேலையில் நிறைவின்மை மற்றும் உயர்கல்வி ஆகியவற்றுக்காக தங்களுக்கு ரூ. 1 கோடி ஊதியம் கிடைக்கும் வாய்ப்பை அம்மாணவர்கள் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கான்பூர் ஐஐடி வேலைவாய்ப்பு மைய தலைவர் பேராசிரியர் தீபு பிலிப் கூறியதாவது:
நேற்று முன்தினம் நடந்த வளாகத் தேர்வில் ஒரு மாணவி, மூன்று மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலான ஊதியம் வழங்க பன்னாட்டு நிறுவனம் ஒன்று முன்வந்தது. அம்மாணவர்களின் நிகர ஊதியம் மட்டும் ஆண்டுக்கு ரூ. 93 லட்சமாகக் கிடைக்கும். ஆனால், நான்கு மாணவர்களும் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டனர்.
அதில், ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தங்களுக்கு அந்த வேலை தொழில்ரீதியான மனநிறைவைத் தராது எனக் கூறி மறுத்து விட்டனர். ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் ஊதியமளிக்கும் வேறொரு சிறு நிறுவனத்தில் அவர்கள் பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டனர்.
மற்ற இரண்டு மாணவர்கள், உயர்கல்வியைத் தொடர விரும்புவதால் ரூ. 1 கோடி ஊதிய வாய்ப்பை நிராகரித்து விட்டனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அந்த நான்கு மாணவர்களின் பெயர், ரூ. 1 கோடி ஊதியம் அளிக்க முன்வந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட கான்பூர் ஐஐடி நிர்வாகம் மறுத்து விட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் காரக்பூர் ஐஐடி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.54 கோடி ஊதியம் அளிக்க ஒரு பன்னாட்டு நிறுவனம் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top