மும்பை, டிச. 6–
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜாகீர்கான்.உலககோப்பை உத்தேச அணியில் இடமில்லை: தேர்வு குழுவின் முடிவு அதிர்ச்சி அளிக்கவில்லை-ஜாகீர்கான்
36 வயதான ஜாகீர்கான் சர்வதேச போட்டிகளில் விளையாடி 8 மாதங்கள் ஆகிறது. பந்துவீச்சில் திறமை குறைந்ததால் ஜாகீர்கான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடைசியாக 2012–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
இந்திய அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட அவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியிலும் இடம் பெறவில்லை.
இதற்கிடையே உலக கோப்பை உத்தேச அணியில் இடம் பெறாதது தனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை என்று ஜாகீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
சாம்பியன் ‘லீக்’ 20 ஓவர் போட்டியில் (அக்டோபர்) விளையாடுவதை இலக்காக வைத்து இருந்தேன். அது நடக்காதது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
உலககோப்பை உத்தேச அணியில் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் சில காலமே உள்ளது. நான் முழு உடல் தகுதியுடன் இல்லை. கிளப்புகள் இடையேயான ஆட்டம் அல்லது ரஞ்சி டிராபியில் விளையாடுவதே எனது இலக்காக இருக்கிறது.
இவ்வாறு ஜாகீர்கான் கூறியுள்ளார்.
ஜாகீர்கான் 92 டெஸ்டில் விளையாடி 311 விக்கெட்டும், 200 ஒருநாள் போட்டியில் ஆடி 282 விக்கெட்டும் எடுத்துள்ளார்.
ஜாகீர்கானோடு ஷேவாக், யுவராஜ்சிங், காம்பீர், ஹர்பஜன்சிங் ஆகியோரும் உத்தேச அணியில் தேர்வு செய்யப்படவில்லை.
2011–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இந்த 5 பேரும் இடம் பெற்று இருந்தனர். இதன்மூலம் இந்த 5 பேரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top