நேபாளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 4 மாதங்களில் 2 முறை பயணம் மேற்கொண்டதை 'நையாண்டி' செய்யும் விதமாக ஒளிபரப்பான நிகழ்ச்சியை அந்நாடு நிறுத்தியது.நரேந்திர மோடி | படம்: ராஜீவ் பட்
நேபாளத்தின் தேசிய தொலைக்காட்சியில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஒளிபரப்பாகும் கசப்பான உண்மை என்று அர்த்தம் கொண்ட ''டிட்டோ சத்யா' என்ற அரசியல் நையாண்டி நிகழ்ச்சி வழக்கம் போல ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பாக வேண்டிய எபிசோடு நிறுத்தப்பட்டதாக அந்த தொலைக்காட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியின் திட்ட இயக்குனர் பிரகாஷ் யுங் கார்கி கூறுகையில், "இந்த நிகழ்ச்சி வெளியாகாதது குறித்து மிகப் பெரிய கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. அந்த எபிசோடில் சில விஷயங்களை நீக்க வேண்டி இருந்தது. ஆனால் நேரம் இல்லாததால் அதனை செய்து முடிக்க முடியவில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து தயாரிக்கப்பட்ட கேலிச்சித்திரத்தை நீக்க கோரப்பட்டது. அதில் அவரை அவதூறு செய்யும் அளவுக்கு எதுவும் இல்லை என்றாலும், எங்களுக்கு வந்த அறிவுறுத்தல்படி அவை நீக்கப்பட்டு அடுத்த வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும்" என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 மாதங்களில் 2 முறை நேபாள நாட்டிற்கு பயணித்துள்ளார். இந்த பயணத்தில் இரு நாட்டுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. எனினும் பிரதமராக பதவியேற்ற குறுகிய காலத்தில் இரு முறை நேபாளத்துக்கு மோடி சென்றதை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி 'நையாண்டி' செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, "நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது பேச்சுரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாகிறது. ஒரு ஜனநாயக நாட்டில், மக்களை ரசிக்க வைக்க பொது வாழ்வில் ஈடுபடுவோரை நையாண்டி செய்ய அனைத்து உரிமைகளும் உள்ளது" என்று ''டிட்டோ சத்யா' நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் நேபாளத்தின் பிரபல நகைச்சுவை நடிகருமான தீபக் ராஜ் கிரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top