சென்னை, டிச.9- 

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைக்கால நிவாரணமாக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 இடைக்கால நிவாரணம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது துணை பட்ஜெட் மற்றும் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கை ஆகியவற்றின் மீது நடந்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:- 

இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை நிறைவான சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. மத்திய அரசின் டீசல் விலை உயர்வுக் கொள்கை காரணமாக, எப்போதெல்லாம் டீசல் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்த விலை உயர்வு பொது மக்களை பாதிக்காத வகையில், 1,298 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கி, போக்குவரத்துக் கழகத்தையும், தொழிலாளர்களையும் இந்த அரசு பாதுகாத்து வருகிறது. 

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, உரியவாறு, உரிய நேரத்தில் வழங்குவதில் இந்த அரசுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. எனினும், கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கையும் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நிலையையும் உணர்ந்து, சில முடிவுகளை இந்த அரசு எடுத்துள்ளது. 

1-9-13 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு 1-1-15 முதல் 1.15 லட்சம் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு, ஊதிய ஒப்பந்தம் உரியவாறு மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top