சென்னை, டிச.9- 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறியதால் கூட்டணிக்கோ, பாரதிய ஜனதா கட்சிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
ம.தி.மு.க. வெளியேறியதால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில், கட்சி உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். 

மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய பொதுசெயலாளர் முரளிதரராவ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த உறுப்பினர்கள் சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:- 

கேள்வி:- ம.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால் கூட்டணிக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும்? 

பதில்:- பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறியுள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தேர்வு செய்த தொகுதிகளை அவர்களுக்கு விட்டு கொடுத்தோம். மோடி செயல்பாட்டால் இந்தியாவே பாராட்டும் போது, வேண்டும் என்றே விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்கள் திட்டமிட்டே சொல்லப்படுவதாக கேள்வி எழுகிறது. 

இதனால் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் தடை ஏற்படாது. 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதுடன், தமிழகத்தில் மோடி ஆட்சியை அமைப்போம் என்ற இலக்குடன் நாங்கள் பயணித்து வருகிறோம். இதனால் எந்தபாதிப்பும் இல்லை. 

நாங்கள் அமைத்த கூட்டணியை நாங்களே சிதைத்து விட கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தோம். ஆனால் பிரதமரை விமர்சனம் செய்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியே இருப்பது அவருக்கு நல்லதல்ல. அவர் கூறும் காரணங்களும் நம்பத்தகுந்ததாக இல்லை. இருப்பினும் கூட்டணியை விட்டு வெளியேறுவது அவர்கள் விருப்பம். சிலர் மேடையில் மட்டுமே இதுபற்றி பேசி வருகிறார்கள். வைகோ எங்களிடம் இருந்தால் இன்னும் பலம் பெற்றிருப்பார். 

கேள்வி:- வைகோவை தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வருகிறாரே? 

பதில்:- நாங்கள் ஏற்கனவே கூறி உள்ளோம். கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய வேண்டாம். கோரிக்கையாக கூறுங்கள் என்கிறோம். ஆனால் வெளிப்படையாக விமர்சனம் செய்கின்றனர். எனவே கூட்டணியில் இருப்பதும், வெளியேறுவதும் அவர்களின் விருப்பம். 

கேள்வி:- பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளாரே? 

பதில்:- பகவத்கீதையின் கருத்துக்களை நம் நாட்டு மக்களும் பின்பற்றுகிறார்கள், வெளிநாட்டு மக்களும் பின்பற்றுகின்றனர். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினம் நாங்கள் எதையும் கட்டாயப்படுத்துவதில்லை. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்ற கூறுகிறோம். விமர்சனத்தை தவிர நல்லவற்றை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இங்குள்ள தலைவர்கள் மத்தியில் இல்லை. 

கேள்வி:- பகவத்கீதை தேசிய நூல் அறிவிப்புக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனரே? 

பதில்:- திருவள்ளுவரையும், பாரதியாரையும் நாடு முழுவதும் அறிவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உண்மையான தமிழ் உணர்வு இருந்தால் ஏன் இவர்கள் இதை பாராட்டவில்லை. 

கேள்வி:- தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவார்களா? 

பதில்:- மீனவர்களை காப்பாற்ற விஞ்ஞான பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு 5 மீனவர்களை விடுதலை செய்தோம். தொடர்ந்து மீனவர்களை காக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top