திருவனந்தபுரம், டிச. 5–
மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை (6–ந் தேதி) பாபர் மசூதி இடிப்புதினம் என்பதால் சபரிமலையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் சபரிமலை கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் 24 மணி நேரமும் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானத்தில் 750–க்கு மேற்பட்ட போலீசாரும், பம்பையில் 350–க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மேலும் சன்னிதானத்தில் ஒரு கம்பெனி கமாண்டோ வீரர்கள் இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை வரை கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் சன்னிதானம் இருக்கும். அதே சமயம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இடையூறு இல்லாத வகையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் இருமுடி கட்டுகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு அவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக பக்தர்கள் செல்ல வேண்டும்.
இன்றும், நாளையும் கோவில் அருகே நெய் தேங்காயை உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக மாளிகை புரத்துஅம்மன் கோவிலுக்கு செல்லும் இடத்தில் நெய்தேங்காயை உடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இரவு நடை சாத்தப்பட்ட பிறகு பக்தர்கள் 18–ம்படி ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு பிறகே அவர்கள் 18–ம்படி ஏறலாம். மேலும் சபரிமலையில் வர்த்தகம் செய்பவர்கள் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அதிகாரிகளாக இருந்தால் கூட அடையாள அட்டை இல்லாவிட்டால் கோவில் அருகே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அதிகளவில் பம்பையில் பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நேற்று சபரிமலையில் நல்ல காலநிலை நிலவியதால் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்துவிட்டு செல்வதில் சிரமம் இல்லாத நிலை காணப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சுவாமி அய்யப்பன் ரோட்டில் காட்டு பகுதியில் சரள்மேட்டில் தற்காலிகமாக மருத்துவமனை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் 2 டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்கள் பணியில் இருப்பார்கள். 

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top