சென்னை வடபழனியை சேர்ந்தவர் பி.சக்திவேல். சென்னை 12வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– 
லிங்கா படத்துக்கு தடை கேட்டு மீண்டும் வழக்கு: கே.எஸ்.ரவிகுமாருக்கு நோட்டீசு
சென்னை லயோலா கல்லூரியில் 2009–ம் ஆண்டு எம்.ஏ. விஷூவல் கம்யூனிகேசன் பட்டம் பெற்றேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தினால், படிக்கின்ற போதே, பிரபல சினிமா கதை ஆசிரியர் பி.என்.சி. கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றினேன். 

இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குவிக் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘உயிர் அணை’ என்ற தலைப்பில் திரைக்கதை எழுதினேன். இந்த தலைப்பை, 2012–ம் ஆண்டு சினிமா மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன். பின்னர், இந்த கதையை பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரிடம் கூறினேன். கதை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், திரைக்கதையை படமாக எடுக்க பெரும் தொகை செலவாகும் என்பதால், அதை தயாரிக்க முன்வரவில்லை. 

இந்த நிலையில், கடந்த நவம்பர் 19–ந்தேதி என்னுடைய கதையை தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்தேன். இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ என்ற தலைப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெங்கடேஷ், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வீன் தயாரித்துள்ளனர். 

இந்த படத்தை கதை தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், லிங்கா படத்தின் கதை முல்லை பெரியாறு அணை மற்றும் பென்னிக்குவிக் தொடர்பானது என்று தெரியவந்தது. இந்த செய்தி, கடந்த நவம்பர் 20–ந்தேதி பத்திரிகையில் விரிவான செய்தியாக வெளியாகியுள்ளது. 

இந்த லிங்கா படத்தின் கதை என்னுடைய கதையாகும். என்னுடைய உயிர் அணை என்ற தலைப்பிலான கதையைத்தான் லிங்கா என்ற பெயரில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். இவர் இயக்கியுள்ள லிங்கா திரைப்படம் வருகிற 12–ந்தேதி வெளியாக உள்ளது. எனவே, என்னுடைய கதையை கொண்ட லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு 12–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கம்படி லிங்கா படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதை ஆசிரியர் பொன்குமார், தயாரிப்பாளர் வெங்கடேசன், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வீன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார். வழக்கு விசாரணையை 9–ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top