அடிலெய்டு, டிச. 5- 

இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 பயிற்சி ஆட்டங்களிலும், நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் ஆடி வருகிறது. 
இந்தியா-ஆஸ்திரேலிய லெவன் இடையே நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது
இதில் முதல் பயிற்சி ஆட்டம் ஏற்கனவே டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இரண்டாவது பயிற்சி ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் அந்த அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சில்க், விக்கெட் கீப்பர் கோட்ச் ஆகியோர் மட்டும் அதிகபட்சமாக தலா 58 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. 

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விஜயும், தவானும் களமிறங்கினர். தவான் டக் அவுட்டாகி வெளியேற விஜய் நிலைத்து நின்று ஆடினார். அடுத்து வந்த புஜாராவும் 22 ரன்னில் நடையை கட்டினார். பின்னர் கேப்டன் கோலி விஜயுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பொறுமையாக விளையாடினர்.

நேற்றைய ஆட்ட நேர இறுதியின் போது விஜய் 39 ரன்களுடனும், கோலி 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களாக இருந்தது. இந்நிலையில் இன்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விஜய் நிதானதாகவும் கோலியும் அதிரடியாகவும் விளையாட ஆரம்பித்தனர். இருவரும் 50 ரன்களை கடந்தனர். பின்னர் கோலி 66 ரன்னிலும், விஜய் 60 ரன்னிலும் ரிட்டயர்டு அவுட் கொடுத்து வெளியேறினர். 

இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு ரகானேவும், 6வது விக்கெட்டுக்கு ரோகித்தும் களமிறங்கினர். இருவரும் தங்கள் பங்குக்கு அதிரடியாக ஆடினர். ரோகித் 48 ரன்களை குவித்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். பின்னர் ரகானேவும் அரை சதம் கடந்து 56 ரன்களில் ரிட்டயர்டு அவுட் கொடுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாகா 67 பந்துகளில் 51 ரன் எடுத்து அவுட்டானார். 

அடுத்து களமிறங்கிய ரெய்னா 20 ரன்னிலும், ஜடேஜா 23 ரன்னிலும், கரன் சர்மா 4 ரன்னிலும் அவுட்டாக, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் மட்டும் 3 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 

பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன், மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கார்ட்டர்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, டர்னர் 12 ரன்னிலும், ஷார்ட் 26 ரன்னிலும், கீத் மற்றும் டோரன் ஆகியோரும் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். சில்க் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் எடுத்தார். 2வது நாள் ஆட்ட நேர இறுதியின் போது 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை ஆஸ்திரேலிய லெவன் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top