உலகக்கோப்பைக்கான இந்திய உத்தேச அணியில் இடம்பெறுவேன் என்று நம்பிக்கை இருப்பதாக சேவாக் கூறியிருந்தது பொய்த்துப்போக, அவர் வழக்கம் போல் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வலைப்பயிற்சியில் இறுகிய முகத்துடன் ஈடுபட்டார்.
கம்பீர்-சேவாக். | கோப்புப் படம்
ரொஷானாரா கிளப் மைதானத்தில் டெல்லி அணியினருடன் கம்பீர், சேவாக் வலைப்பயிற்சி செய்தனர். மற்ற வீரர்கள் வெள்ளை உடையில் பயிற்சி செய்ய சேவாக், கம்பீர் வண்ணமயமான டிராக் சூட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

சேவாகும் கம்பீரும் தன்னிலே சாம்பியன் வீரர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், அணித்தேர்வுக்கு அதுவும் 30 வீரர்களில் ஒருவராகக் கூட தேர்வு செய்யப்படாமல் போனது நிச்சயம் அவர்களது ஈகோ-வை காயப்படுத்தியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

உலகக்கோப்பை அணி தேர்வு பற்றி பேசப்போவதில்லை என்று தெளிவு படுத்திய கம்பீர் அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் ரஞ்சி டிராபி தயாரிப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது:

"பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடுவதே சிறந்தது (பெரோஸ் ஷா கோட்லா). ஆனால், 800 ரன்கள் எடுத்து என்ன பயன், நமது அணி நாக்-அவுட் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் போகும்போது? பேட்ஸ்மென்கள் ஆட்டத்தை அருமையாக அமைக்கலாம், ஆனால் பவுலர்கள்தான் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும். ரொஷானாரா பிட்ச் 5 சிறப்பு பவுலர்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது” என்று சவுராஷ்டிரா அணிக்கு எதிராக ஞாயிறன்று நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி கூறினார்.

சேவாக் செய்தியாளர்களைச் சந்திக்க காத்திருக்கவில்லை. வலையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஓய்வறைக்கு மற்ற வீரர்கள் திரும்பும் முன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

வலையில், கண்ணில் தெரியும் பந்துகள் அனைத்தையும் அடித்து நொறுக்கும் மூடில் இருந்தார். அவர் அடித்த ஷாட்களில் பல சரியாக மட்டையில் சிக்காவிட்டாலும், கடைசியாக இன்சைட் அவுட் முறையில் கவர் திசையில் தூக்கி அடிக்கப்பட்ட ஷாட் அந்த தனியார் கிளப் மைதானத்தில் இருந்த நூலக ஜன்னலின் கண்ணாடியைப் பதம் பார்த்தது. ஜன்னல் கண்ணாடி இவரது ஷாட்டினால் உடைந்தது.

உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்காதது பற்றிய அவரது கோபத்தை இந்தக் கடைசி ஷாட் உருவகப்படுத்துகிறதோ?

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top