பெரியபாளையம், டிச. 5–
வெங்கல் அருகே வெங்கல் குப்பத்தை சேர்ந்தவர் சிவா கூலி தொழிலாளி. இவருக்கு மேனகா(13), ஆதி (எ) நெடுஞ்செழியன் (12) என்ற மகளும், மகனும் இருந்தனர். வெங்கலில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேனகா 7–ம் வகுப்பும், ஆதி 6–ம் வகுப்பும் படித்து வந்தனர்.பஸ்சில் அடிபட்டு மாணவர் சாவு: பொதுமக்கள் போராட்டத்தில் பஸ் எரிப்பு
இன்று காலை 2 பேரும் பெரியபாளையம் – ஆவடி நெடுஞ்சாலை வழியாக பள்ளிக்கு நடந்து சென்றனர். வெங்கல் பெட்ரோல் பங்க அருகே நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஆதியின் கையில் இருந்த 5 ரூபாய் நாணயம் கீழே விழுந்து சாலையில் உருண்டு ஓடியது.
அதை எடுக்க ஆதி சாலையின் குறுக்கே ஓடிய போது ஆவடியில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த மாநகராட்சி பஸ் அவன் மீது ஏறி இறங்கியது. காப்பாற்ற சென்ற மேனகா மீதும் பஸ் மோதியதில் அவர் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானான்.
விபத்து நடந்தவுடன் பஸ் டிரைவர் பிரபாகரன் பஸ்சை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
தகவல் அறிந்ததும் வெங்கல், வெங்கல் குப்பம், பாகல் மேட்டை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆதியின் உறவினர்கள் என சுமார் 200 பேர் வெங்கல் பெட்ரோல் பங்க் அருகே விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி திடீரென சாலை மறியல் செய்தனர்.
பின்னர் பஸ்சை கல்லால் தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தன. மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சுக்கு தீயை வைத்தனர்.
தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை சூப்பிரண்டு குமரவேல் தலைமையில் அதிரடி படையினர் விரைந்து சென்று பொது மக்களை கலைந்து போக செய்தனர். அப்போது போலீசுக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் லேசான தடியடி நடத்தி பொது மக்களை கலைந்து போகச் செய்தனர்.
பின்னர் போலீசார் பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். இதற்குள் பஸ் பாதி எரிந்து விட்டது. போலீசில் தடியடி நடத்தியதில் பொது மக்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேனகாவும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் அந்த பகுதியில் பொதுமக்களின் செருப்புகளும், 2 சக்கர வாகனங்களும் சிதறி கிடந்தன.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெங்கலில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.
அசம்பாவிதத்தை தடுக்க வெங்கலில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top