கிறிஸ்டினா பிமெனோவா ரஷ்யாவின் சூப்பர் மாடல். ஒன்பது வயதான கிறிஸ்டினா, 20, 30 வயது மாடல்களைப் போல் புகழின் உச்சியில் இருக்கிறார். அப்பா கால்பந்து வீரர், அம்மா மாடல். 3 வயதிலேயே கிறிஸ்டினாவுக்கு மாடலிங் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சியோடு செய்ய ஆரம்பித்தார். மாடலுக்குரிய மேக்-அப், ஒர்க் அவுட், சிகை அலங்காரம் எதுவும் செய்து கொள்ளாமலேயே கிறிஸ்டினா உலகின் மிக அழகான மாடலாக வலம் வருகிறார்.
ஃபேஸ்புக்கில் அவருக்கு 20 லட்சம் விசிறிகள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் அவரைப் பின்தொடர்கிறார்கள். இத்தனைப் புகழோடு இருக்கும் தன் மகளைக் கண்டு பெருமிதம் கொண்டாலும், அவர் அம்மாவுக்கு ஒரு கவலை இருக்கிறது. குழந்தை என்றும் பாராமல், ஆண்கள் மிக மோசமான கருத்துகளை அவரது ஃபேஸ்புக்கில் பதிகிறார்கள். எத்தனை மோசமான உலகமாக இருக்கிறது என்கிறார் அம்மா.
இதுதான் கலிகாலம் போலிருக்கு…
கோகோ கோலா உடலுக்கு எவ்வளவு கெடுதி என்பதை நிரூபிப்பதற்காகத் தன்னையே சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார் 50 வயது ஜார்ஜ் பிரையர். தினமும் 10 டயட் கோக் டின்களை வாங்கி, 3 மாதங்கள் வரை குடித்தார். ஒரு டின்னில் 35 கிராம் சர்க்கரை இருந்தது. தினமும் 350 கிராம் சர்க்கரை அவர் உடலில் சேர ஆரம்பித்தது. ஆரோக்கியமான, கட்டுடல் கொண்ட ஜார்ஜ் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. வயிற்றில் தொப்பை உருவானது. தசைகள் தளர்ந்தன.
76 கிலோவிலிருந்து 86 கிலோவுக்கு எடை கூடிப்போனது. ரத்தக் கொதிப்பு அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்தமாக மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருந்தன. அதிக அளவில் கோக் குடிக்கும்போது பசியும் குறைந்துவிடுவதால், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவும் முடிவதில்லை. குழந்தைகள் அதிகம் உட்கொண்டால் டைப் 2 சர்க்கரை நோய், பல் சிதைவு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கோக் தன்னுடைய தயாரிப்புகளில் உடனடியாகச் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களிடம் கோக் குடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்துச் சொல்வேன் என்கிறார் ஜார்ஜ்.
பன்னாட்டு நிறுவனங்களுடன் மோதும் உங்க தைரியத்துக்கு ஒரு சல்யூட்!
உலகம் முழுவதும் பல மொழிகளில் பைபிள் வெளிவந்திருக்கிறது. இந்த பைபிளை எல்லோரும் படிக்கக்கூடிய விதத்தில் சுவாரசியமான நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் பிலிப் லெகெர்மியர். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களும் இந்தப் புத்தகத்தை விரும்பி வாசிக்க முடியும். ஏனென்றால் இது குறிப்பிட்ட மதத்தையோ, மத நம்பிக்கைகளையோ பிரதிபலிக்கவில்லை. ‘என் குழந்தைகளுக்கு பைபிள் படிப்பதில் சிரமம் இருந்தது.
அப்போதுதான் நாவல் வடிவத்தில் பைபிளை எழுதும் எண்ணம் தோன்றியது. பைபிளின் கேரக்டர்கள் இதில் இருக்கும். ஆனால் எந்த நம்பிக்கையையும் அறிவுறுத்தாது’ என்கிறார் பிலிப். கடந்த அக்டோபரில் வெளியான இந்தப் புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மதகுருமார்கள் கூட இந்தப் புத்தகம் பிரமாதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது என்று சொல்லிவிட்டார்கள். டீலக்ஸ் பதிப்பாக 500 பிரதிகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. ஸ்பானிஷ், இத்தாலியன், ஜெர்மன், டச்சு மொழிகளில் 60 ஆயிரம் பிரதிகள் விற்பனைக்கு வர இருக்கின்றன.
உங்க எழுத்துக்கு வரவேற்பு இருப்பதில் ஒண்ணும் ஆச்சரியமில்லை பிலிப்!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் 2,945 மனிதர்கள் சேர்ந்து ‘மனித கிறிஸ்துமஸ் மரம்’ ஒன்றை உருவாக்கினார்கள். அதிக அளவு மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கிறிஸ்துமஸ் மரம் கின்னஸில் இடம் பெற்றுவிட்டது. சென்ற ஆண்டு அர்ஜெண்டினாவில் 1900 மனிதர்கள் சேர்ந்து உருவாக்கிய மனித கிறிஸ்துமஸ் மரம் உலக சாதனை படைத்தது. தற்போது ஹோண்டுராஸ் அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது!
சாதனை என்பதே முறியடிப்பதற்குத்தானே…

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top