இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெல்லும் ஆனால் எப்படி வெல்லும் என்பது இந்திய பேட்ஸ்மென்கள் ஆஸ்திரேலிய வேகத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.

டெய்லி டெலிகிராப் பத்தியில் அவர் கூறியிருப்பதாவது: 
இந்திய தொடக்கம் நன்றாக அமைந்தால் விராட் கோலி, ரோஹித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மென்களாக இருப்பார்கள் என்கிறார் இயன் சாப்பல். | கோப்புப் படம்.
"ஒரு விஷயம் நமக்கு தெரியும், ஆஸ்திரேலியா வெற்றி பெறும். ஆனால் எப்படி, எந்த அளவு இடைவெளியில் வெற்றி பெறும் என்பது தெரியாது. ஆஸ்திரேலிய பிட்ச்களின் வேகத்தையும் எழும்பும் பந்துகளையும் இந்திய பேட்ஸ்மென்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்து எந்த அளவிலான இடைவெளியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்பது தெரியும். 

பேட்டிங்கில் இந்தியா நல்ல தொடக்கம் காண்பது அவசியம். அப்படி நல்ல தொடக்கம் கண்டார்களேயானால், புல், கட், ஹூக் ஷாட்களை திறம்பட ஆடும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு அபாயகரமாகத் திகழ்வார்கள் என்பது நிச்சயம். 

பந்து வீச்சில் இசாந்த் சர்மா அனுபவம் மிக்கவர், அவர் சக்தி வாய்ந்த ஒரு தலைமை வீச்சாளராக இங்கு திகழ்வது அவசியம். புதிய பந்தில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தினாரென்றால், மற்ற பவுலர்களின் விக்கெட் வாய்ப்புகளை அது அதிகரிக்கும். இதுதான் ஆஸ்திரேலியாவை ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் உள்ள பலவீனத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு. 

2 வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா 4-0 என்று வெற்றி பெறுவது என்றே தெரிந்தது. ஆனால், பிலிப் ஹியூஸின் அகால மரணம் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியர்களுக்கு இந்தத் தொடர் பெரும் சிரமத்தைக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பேட்ஸ்மென்களை விட பவுலர்களுக்கு மிகக் கடினம். 

இப்போதிருக்கும் நிலையில் எந்த பவுலரும் பவுன்சர் வீசி பேட்ஸ்மென்களைத் தாக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். பவுன்சர் வீசியே ஆகவேண்டும் என்பதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு அங்கமாகும் அது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தாலும், அவர்கள் பவுன்சர்களை வீசினாலும், அதனை தீவிரமாக வீசுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்றே நினைக்கிறேன்.” என்று எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top