சென்னை, டிச. 3–
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.சட்டசபை கூட்டம் 3 நாள் நடக்கிறது: ஆய்வுக்குழு கூட்டத்தில் திமுக வெளிநடப்பு
முதல்–அமைச்சர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, ‘பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும்’ என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதாக அறிவித்திருப்பது, பம்பை ஆற்றில் கேரளா அணை கட்ட முயற்சிப்பது, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளா தொடர்ந்து எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை குறித்து இந்த கூட்டத்தொடரில் முக்கிய விவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்தலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டமன்ற கொறடா மனோகரன், சக்கரபாணி (தி.மு.க.), சந்திரகுமார் (தே.மு.தி.க.), சவுந்திரராஜன் (மார்க். கம்யூ), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோர் பங்கேற்றனர்.
குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:–
நாளை (4–ந்தேதி) காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், பெ.கந்தசாமி, நா.மகாலிங்கம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், மு.ரங்கநாதன், ஏ.சு.சுப்பராஜா ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவித்தல்.
அடுத்து 2014–15–ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான 2–வது துணை நிதி நிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல் மற்றும் அரசினர் அலுவல்கள் நடைபெறும்.
5–ந்தேதி அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 6, 7–ந்தேதி விடுமுறை.
8–ந்தேதி (திங்கட்கிழமை) துணை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கை மீது விவாதம் பதிலுரை மற்றும் அதில் உள்ள மானிய கோரிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெறும்.
பின்னர் 2014–15–ம் ஆண்டு கூடுதல் துணை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கை குறித்த நிதியை ஒதுக்குவது பற்றிய சட்டமுன் வடிவு கொண்டு வந்து ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது. மற்ற அரசினர் அலுவல்களும் அன்றைய தினம் நடைபெறுகிறது.
இவ்வாறு அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தை அதிக நாட்கள் நடத்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கொறடா சக்கரபாணி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இன்று நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டசபை குளிர்கால கூட்டத்தை குறைந்தது 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இதுபற்றி விவாதிக்க வேண்டியுள்ளது என்று கேட்டோம். எதிர்கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை வைத்தன.
ஆனால் 10 நாட்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பதை அவர் ஏற்கவில்லை. விவாதம் நடத்த வேண்டிய பிரச்சினை என்ன என்பதை பட்டியலிட்டோம். காவிரி குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டும் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, பால் விலை உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவு, உரத்தட்டுபாடு, முதியோர் பென்சன் ரத்து, தர்மபுரி ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை இறப்பு சம்பவம், போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வு, டெங்கு காய்ச்சல், பருவ மழையால் ஏற்பட்ட சேதங்கள், விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்சினை சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதை சுட்டிக் காட்டினோம்.
10 நாட்களாவது சபையை நடத்தினால்தான் விரிவாக பேச முடியும் என்றோம். ஆனால் 3 நாட்கள் தான் சபையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறினார். அதுவும் திங்கட்கிழமை ஒருநாள் தான் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேச வாய்ப்பு வழங்கப்படும் என்றார். எனவே அதை ஏற்க மறுத்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
இவ்வாறு சக்கரபாணி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினீர்களா? என்று கேட்டபோது, ஏற்கனவே இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பத்திரிகைகளில் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்திருக்கிறார். நாங்களும் ஏற்கனவே கடிதம் கொடுத்து இருக்கிறோம். அனைத்து கட்சியினரும் தி.மு.க. தலைவர் சபையில் பேச இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சக்கரபாணி கூறினார்.
இதுபோல், சந்திரகுமார் (தே.மு.தி.க), சவுந்தரராஜன் (மார்க். கம்யூ), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) ஆகியோரும் சபையை 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தியதாகவும், 3 நாட்கள் மட்டும் சட்டசபையை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
சட்டசபை நாளை கூடுவதையொட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இதில் சட்டசபையில் எந்த எந்த பிரச்சினைகளை எழுப்புவது? எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுபோல் மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் எவ்வாறு பங்கேற்பது என்பது குறித்தும் அந்தந்த கட்சிகள் சார்பில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top