புதுடெல்லி, டிச. 3–
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து கடந்த மே மாதம் 7–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரளாவின் சீராய்வு மனு தள்ளுபடி
ஆனந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கேரள மாநில அரசு ஏற்கவில்லை. என்றாலும் தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியை தேக்கி வைக்கும் வகையில் பராமரிப்பு பணிகளை செய்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அப்போது அணையை ஆய்வு செய்த நிபுணர்கள் முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை கூட தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்தால் அணை உடைந்து விடும். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி வந்த கேரளாவின் வாதம் சமீபத்தில் தகர்ந்து போனது.
ஆனால் கேரளா அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் பிடிவாதமான போக்கையே கடைபிடிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
அந்த சீராய்வு மனுவில், ‘‘ஆனந்த் குழு தவறான மதிப்பீடு செய்து அறிக்கை கொடுத்தது. எனவே அந்த அறிக்கை அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று கேரளா கூறி இருந்தது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி அறையில் இந்த விசாரணை நடந்தது.
மறு சீராய்வுக்கான மனு என்பதால் இந்த விசாரணையில் இருமாநில அரசுகளின் சார்பில் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. எனவே கேரள மனு மீது சுப்ரீம் கோர்ட்டு என்ன முடிவு எடுத்துள்ளது என்ற விவரம் நேற்று உடனடியாக தெரியவில்லை.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச், தனது முடிவை இன்று பதிவாளரிடம் வழங்கியது. இதையடுத்து இன்று மதியம் தீர்ப்பு விவரம் வெளியானது.
கேரள மாநில அரசின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது அப்போது தெரியவந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ‘‘முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை தேக்கி வைக்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பு மிகவும் சரியானதே. அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
மறு ஆய்வு நடத்த எந்த முகாந்திரமும் ஏற்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. எனவே கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மூலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மீண்டும் உறுதியான வெற்றி கிடைத்துள்ளது. தமிழ் நாட்டின் உரிமை இந்த தீர்ப்பு மூலம் மீண்டும் ஒரு முறை நிலை நாட்டப்பட்டுள்ளது

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top