புத்தகக் கடைகளில் சிறுவர்களைக் காண்பதே அபூர்வமாக இருக்கிறது. சென்னையின் பல்வேறு புத்தகக் கடைகளுக்கும் வாடிக்கையாகப் போய் வருபவன் என்ற முறையில் புத்தகக் கடை என்பதே நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஆனது போலக் காட்சியளிக்கிறது.
விடுமுறை நாட்களில் முன்பு கல்லூரி மாணவர்கள் நிறையப் புத்தகக் கடைகளுக்குள் தென்படுவார்கள். அவர்களும் இப்போது கண்ணில் இருந்து மறைந்து வருகிறார்கள். ஒருவேளை சிறுவர்கள் பெற்றோருடன் வந்தாலும் நேரடியாக ஆங்கிலக் கதைப் புத்தக வரிசைக்குப் போய் விடுகிறார்கள். இவர்கள் பேச மட்டுமே தமிழ் தெரிந்த சிறுவர்கள். எழுதுவதோ, வாசிப்பதோ இயலாது. தமிழ் பாடத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுதி வைத்து வாசிக்கக் கூடியவர்கள்.
ஏன் இவர்கள் புத்தகங்களை இப்படி வேண்டாதப் பொருளாக நினைக்கிறார்கள்?
நாவல், கட்டுரை, கவிதை என எவ்வளவு முக்கியமான புத்தகம் தமிழில் வெளியானாலும் அதைப் பற்றி ஒரு வரி கூடத் தொலைக்காட்சிகள் கண்டுகொள்ள ஏன் மறுக்கின்றன? இதே தமிழ் தொலைக்காட்சிகள்தான் ஆங்கிலத்தில் ‘சேத்தன் பகத்’ புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பு இருந்து இன்றுவரை அவரது நாவல் குறித்துத் தொடர்ந்து தகவல்களைத் தந்து கொண்டே இருக்கிறார்கள். இதிலும் தமிழ் எழுத்தாளன் தீண்டத் தகாதவன்தானா?
புத்தகக் கடைகளுக்குப் பெற்றோர்களே போவதில்லை. பிறகு எப்படிப் பிள்ளைகளை அழைத்துப் போவார்கள் எனக் கேட்டார் எனது நண்பர் ஒருவர். தனியாகப் பிள்ளைகள் சினிமா தியேட்டருக்கும், ஷாப்பிங் மாலுக்கும் போகிறார்களே, அந்த வளாகத்தில் புத்தகக் கடைகளும் இருக்கத்தானே செய்கின்றன. அங்கே ஏன் போக விரும்புவதில்லை எனக் கேட்டேன்.
ஆன்லைனில் வாங்கிவிடுவார்கள் எனச் சமாதானம் சொன்னார் நண்பர். அது பொய். 10 சதவீதம் பேர் கூடப் புத்தகக் கடைகளுக்குப் போவது இல்லை என்பதே உண்மை. காரணம், மாணவனுக்குப் பாடப் புத்தகங்களுக்கு வெளியே எந்தப் புத்தகத்தையும் கல்வி நிலையங்கள் அறிமுகப்படுத்துவது இல்லை. குறைந்தபட்சம் வாரம் ஒரு வகுப்பறையை ஆசிரியரே அழைத்துச் சென்று சாலையோரப் புத்தகக் கடைகளில் கிடைக்கும் மலிவு விலைப் புத்தகங்களையாவது வாங்கலாம்தானே.
பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் புத்தகங்கள் அளிப்பது பொதுவழக்கம். ஆனால், அப்படித் தரப்படும் புத்தகங் கள் தரமானதாகவோ, மாணவனுக்குப் பயனுள்ளதாகவே இருப்பதே இல்லை. ஒரு பள்ளியில் மாணவர்கள் அத்தனை பேருக்கும் பள்ளி முதல்வர் எழுதிய கட்டுரைப் புத்தகத்தைப் பரிசாகத் தந்திருந்தார்கள். அந்த மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது, பள்ளி பேருந்தில் இருந்தபடியே தங்களின் பரிசுப் புத்தகத்தைச் சாலையில் வீசி எறிந்து போவதைக் கண்டேன்.
விழாவில் கலந்து கொண்ட எனக்குப் பரிசாக, ’கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவது எப்படி’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார்கள். இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? இப்படி ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுக்கத் தேர்வு செய்த அதிபுத்திசாலி யாராக இருக்கும்? இது போன்ற அபத்தங்கள் பெரும்பான்மையானப் பள்ளிகளில் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
யோகா வகுப்பு, இசை வகுப்பு, ஓவிய வகுப்பு போல... வாரம் ஒன்றோ, இரண்டோ வகுப்புகள் புத்தக அறிமுகத்துக்காகப் பள்ளி தோறும் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வாசிப்பு என்பது மாணவர் மத்தியில் பரவலாக அறிமு கமாகும்.
என் பள்ளி நாட்களில் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் வழியிலுள்ள சாலையோரப் புத்தகக் கடைக்குப் போய் நின்றுகொண்டு ‘அம்புலி மாமா’, ‘கண்ணன்’, ‘காமிக்ஸ்’ புத்தகங்கள் கிடக்கிறதா எனத் தேடிக் கொண்டிருப்பேன். சில சமயம் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாங்கிப் போய் வாசிப்பேன்.
சிறுவயதில் வாசித்து ரசித்த புத்தகங்களில் ஒருசிலதான் இப்போது மறுபடி படிக்கும்போதும் சந்தோஷம் அளிக்கின்றன. அப்படிச் சிறுவயதில் இருந்தே என்னை வசீகரித்த ஒரு புத்தகம் ‘ஜோனதன் ஸ்விப்ட்’ (Jonatan SWift ) எழுதிய ‘கல்லிவர்ஸ் டிராவல்ஸ்’ (Gullivers Travels). 1726-ல் வெளியான நாவல் இது.
முதலில் இதன் சுருக்கப்பட்ட பதிப்பை 50 பைசா கொடுத்து, பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்தேன். பின்பு நூலகத்தில் இருந்து இதன் முழுமையான பதிப்பை எடுத்து வந்து படித்தேன். சமீபத்தில் இதன் தமிழாக்கம் ‘கலிவரின் பயணங்கள்’ என்ற பெயரில், யூமா வாசுகியின் மொழியாக்கத்தில் வெளியாகி உள்ளது. அதையும் வாங்கி வாசித்தேன். கலிவர் என் பதின்வயதிலிருந்து கூடவே வளர்ந்து கொண்டு வருகிறார்.
கடற்பயணத்தில் அதிக ஆர்வம் கொண்ட மருத்துவரான கலிவர், தென் கடலில் ஒரு பயணம் மேற்கொள்கிறார். எதிர்பாராமல் புயலில் சிக்கி கப்பல் கவிழ்ந்துவிடவே, கடலில் சிக்கித் தவித்துக் கரை ஒதுங்குகிறார். கண் விழித்துப் பார்த்தபோது, தன்னைத் தரையோடு பிணைத்துக் கட்டிப் போட்டிருப்பதை அறிகிறார். அவரைக் கட்டிப் போட்டிருந்தவர்கள் கட்டை விரல் உயரம் உள்ள குள்ள மனிதர்களான ‘லில்லிபுட்டீன்ஸ்’. அவர்கள் கலிவருக்கு உணவு அளிக்கிறார்கள். பாதுகாப்பாக அரண்மனைக்குக் கொண்டு போய், அரசரிடம் ஒப்படைக்கிறார்கள்.
‘பிளெபஸ்கியூடியன்ஸ்’ என்ற தீவை ‘லில்லிபுட் தேசம்’ வெற்றி கொள்ளக் கலிவர் உதவுகிறார். ஆனால், அந்தத் தீவை லில்லிபுட்டோடு இணைக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இதனால் துரோகியாக அறிவிக்கபட்டுத் தண்டனை பெறுகிறார், அங்கிருந்து தப்பிக்க கலிவர் எப்படி வேறு வேறு தீவுகளை நோக்கிப் பயணங்களை மேற்கொள்கிறார்... என்ற கதையை அங்கதச் சுவையோடு சுவாரஸ்யமாகச் சொல்கிறார் ஸ்விப்ட்.
1700-களில் கடற்பயணங்களைப் பற்றி மிகையான கற்பனையுடன் நிறையப் புத்தகங்கள் வெளியாகி பரவலாக வாசிக்கப்பட்டு வந்தன. அதைக் கேலி செய்யும் விதமாகவே இந்த நூலை ஸ்விப்ட் எழுதினார். இன்று உலகெங்கும் நன்கு அறியப்பட்ட இரண்டு சொற்கள் இந்த நாவலில்தான் முதன்முதலில் இடம்பெற்றன. ஒன்று லில்லிபுட் (Lilliput), மற்றொன்று யாகூ (yahoo).
நான்கு முறை திரைப்படமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் இந்த நாவல் தயாரிக்கப்பட்டுள்ளது. குள்ள மனிதர்கள் என்றாலே ‘கலிவரின் யாத்திரை’ என்று கூறுமளவுக்கு இந்த நூல் உலக இலக்கியத்தில் தனி இடம் பிடித்திருக்கிறது.
தோற்றத்தில் குழந்தைகள் கதையைப் போலவே தெரியும் இந்த நாவலின் அடித்தளம்... சமூகம் எப்படித் தனிமனிதனை நடத்துகிறது? அதிகாரம் எவ்வாறு ஒடுக்குகிறது? வேறு வேறு சமூகங்களின் பண்பாட்டு வாழ்க்கை எப்படியிருக்கிறது? எது நாகரீகம்... எது அநாகரீகம்? தனிமனிதன் சமூகத்தோடு எந்த நிலையில் முரண்படுகிறான்... என ஆழமான தேடுதலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள அருமையான நாவல் இது. ஆகவே புனைவு பிரதேசத்துக்குள் பயணம் செய்ய விரும்புகிறவர்கள், அவசியம் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
இன்று ‘கலிவரின் பயணம்’ கதையை வாசிக்கும்போது பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகள் கண்முன்னே வந்து வந்து போகின்றன. இப்படியான வாசிப்பையும் சாத்தியமாக்குவதே கலிவரின் வெற்றி என்பேன்!

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top