புதுச்சேரி, டிச.11–
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. புதுவையில் ஒட்டுமொத்தமாக அனைத்து திரையரங்குகளிலும் லிங்கா திரையிடப்படுகிறது. நியூடோன், ரத்னா, ராஜா, ஜீவா, ருக்மணி, பாலாஜி, முருகா, வில்லியனூர் அசோக், திருபுவனை சரஸ்வதி, காலாப்பட்டு ஜெயா, மூலக்குளம் வசந்தராஜா, திருக்கனூர் லட்சுமி ஆகிய 12 தியேட்டர்களிலும் லிங்கா திரைப்படம் நாளை திரையிடப்படுகிறது. நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.புதுவையில் முதல் முறையாக அனைத்து தியேட்டர்களிலும் ரஜினியின் லிங்கா திரைப்படம்
இதனால் நாளை ஒரு நாளில் மட்டும் 60 காட்சிகள் ஓடுகிறது. இணையதளம் மூலம் பதிவு செய்யப்படும் அனைத்து தியேட்டர்களிலும் 3 நாள் காட்சிகள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது. கவுண்டரில் டிக்கெட் வழங்கும் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே சொற்ப இடங்கள் உள்ளது.
இதுவரை புதுவையில் 3, 4 தியேட்டர்களில் மட்டும் தான் ஒரு படம் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் புதுவையில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்கிலும் ஒரு படம் வெளியாவது முதல் முறையாகும். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் லக்கி பெருமாள் கூறியதாவது:–
புதுவையில் கடற்கரைக்கு அடுத்த பொழுதுபோக்கு திரையரங்குகள்தான். ஆனால் அரசு உரிய முக்கியத்துவம் அளிக்காததால் பல தியேட்டர்கள் ஓட்டல், வணிக வளாகங்களாக மாறிவிட்டது.
தமிழகத்தில் புதிய படங்களுக்கு தியேட்டர்களே கட்டணத்தை நிர்ணயிக்கலாம் என்ற சலுகை தரப்பட்டுள்ளது. இதனால் அங்கு முதல்வாரத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் பெரியளவில் வசூல் செய்துவிடுகின்றனர். ஆனால் புதுவை அரசு எந்த சலுகையும் தரவில்லை. புதுவையில் திருட்டு விசிடிக்களும் அதிகளவு விற்பனையாகிறது.
படம் திரையிடப்பட்ட ஓரிருநாளில் திருட்டு சி.டி. கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் தியேட்டர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இவற்றை கருத்தில்கொண்டு அரசு திரையரங்குகளுக்கு புதிய சலுகைகளை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிர்வாகத்தின் மீதும், கள்ளத்தனமாக டிக்கெட் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top