காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடந்த அரசு விழாவில் புகழாரம் சூட்டப்பட்டதாக, மாநிலங்களவையில் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.மாநிலங்களவை | கோப்புப் படம்: பிடிஐ
மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் ஹுசைன் ஹவுர் பேசும்போது, மகாராஷ்டிராவில் அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், குறிப்பிட்ட மத தலைவர்களும் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசியதாக குற்றம்சாட்டினார்.
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாகக் கூறி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வேலைகளில் அரசு ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது குறித்து அம்மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினையால் மாநிலங்களவை தொடர் அமளியில் இயங்கியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவர் முன் நின்று கோஷமிட்டனர்.
அவர்களிடம் அவை நடவடிக்கைகளுக்கு பாதகம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட துணை சபாநாயகர் பி.ஜே.குரியன், இது தொடர்பாக நாடாளுமனற விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி விளக்கம் அளிக்க அனுமதித்தார்.
அப்போது பேசிய நக்வி, "இதனை அரசால் ஏற்றுக்கொள்ள முடியாது. மகாத்மா காந்தியை படுகொலை செய்தோர் யாராக இருந்தாலும், அவர்கள் அரசுக்கு எதிரானவர்கள்தான். காந்தியை படுகொலை செய்தவரை புகழ்பாடும் நடவடிக்கைகளை அரசு ஆதரிக்காது" என்றார்.
இந்த விவகாரத்தால் மாநிலங்களவை இன்று இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top