உலகையே அச்சுறுத்திய எபோலா நோய்க்கு எதிராக போராடிய மருத்துவக் குழுவுக்கு 'ஆண்டின் சிறந்த மனிதர்' விருது என்ற கவுரத்தை அளித்திருக்கிறது, அமெரிக்காவின் 'டைம்' பத்திரிகை.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'டைம்' பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்ந்தெடுப்பதற்கான இணைய வாசகர்களுக்கான வாக்கெடுப்பு, கடந்த மாதம் 19-ம் தேதி துவங்கி, இம்மாதம் 6-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், கொடிய நோயான எபோலாவுக்கு எதிராக போராடி வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை 2014-ஆம் ஆண்டின் 'சிறந்த மனிதராக' 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது.
உலக மக்கள் நிம்மதியோடு தூங்க மன உறுதியுடனும் கருணை உள்ளத்தோடும் தங்களது நேரத்தை முழுவதுமாக அளித்து எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க களத்தில் இறங்கிய தியாக உள்ளங்களை போற்றக்கூடிய வகையில் இந்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பு குறித்து நடந்த நிகழ்ச்சியில் 'டைம்' பத்திரைகையின் ஆசிரியர் நான்ஸி கிப்ஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் 'போரும் அதன் ஓர் எச்சரிக்கை'யும் என்று எபோலா நோயைக் குறிப்பிட்டு பேசிய நான்ஸி கிப்ஸ், அதனை எதிர்த்து போராடிய 5 பேரின் பெயரை குறிப்பிட்டார்.
அதில், 37 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், எபோலா தொற்று ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த மருத்துவர் ஜெர்ரி பிரவுன், எபோலா நோய்க்கு தனது பெற்றோரை இழந்து, அவர்கள் மூலம் பாதிப்புக்குள்ளாகி, அதிலிருந்து பின்னர் மீண்ட சலோம் கர்வா, எல்லா வாட்சான் மற்றும் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் அமெரிக்க மருத்துவரும், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவர்கள் குழுவின் விளம்பரதாரருமான கென்ட் ப்ராண்ட்லிஹூ ஆகியோர் கொண்ட எபோலா நோய் எதிர்ப்பாளர்கள் குழுவை கவுரவித்துள்ளது டைம் இதழ்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, எபோலா நோய்க்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 6,300 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இதற்கு கினியா, லைபீரியா, சியேரா லியோன் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர சுமார் 6,000 பேர் நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்துடன் இருக்கின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு 'டைம்' பத்திரிகையின் சிறந்த மனிதராக போப் ஆண்டவர் தேர்வானார் என்பதும், இந்த ஆண்டில் வாசகர்களின் வாக்களிப்பில் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலை வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top