சென்னை, டிச. 9–
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வூதியம், விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறாததால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் திருச்சியில் ஒன்று கூடி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர்.சென்னை பல்லவன் இல்லத்தில் 2 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை: போலீசாருடன் மோதல்
இதன்படி 19–ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்ய மாநாட்டில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மட்டுமின்றி பல்வேறு கோரிக்கைகள் இருப்பதால் இவற்றை பேசி தீர்க்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கூறி வந்தன. சுப்ரீம் கோர்ட்டு வழக்கை திரும்ப பெற வேண்டியது அ.தி.மு.க. சங்கமே தவிர இதற்கு மற்றவர்கள் பொறுப்பல்ல என்று தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கும் சென்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொ.மு.ச. ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எப். உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களை சேர்ந்த பஸ் தொழிலாளர்கள், டிரைவர், கண்டக்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் கையில் கோரிக்கை மனுவுடன் சென்றனர்.
பல்லவன் இல்லத்தை தொழிலாளர்கள் முற்றுகையிடுவதை அறிந்த போலீசார் தடுப்பு அமைத்து அவர்களை தடுத்தனர். வாயிற்கதவையும் அதிகாரிகள் பூட்டி இருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் தடுப்பை மீறி சென்றனர். அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு கம்பி சாய்ந்து விழுந்ததில் 2 தொழிலாளர்களுக்கு கால் உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனால் தொழிலாளர்கள் மேலும் ஆவேசம் அடைந்து பல்லவன் இல்ல வாயிற் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து நொறுக்கினர்.
தொழிலாளர்கள் திரளாக வருவதை அறிந்த நிர்வாக இயக்குனர் இன்று அலுவலகத்துக்கு வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அதிகாரி வந்து மனு வாங்கும் வரை இங்கிருந்து கலையமாட்டோம் என்று தர்ணாவில் ஈடுபட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top