வாக்குகளை விலைக்கு வாங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும் என்றும், ஜனநாயகம் விலை பேசப்படுவதை தடுக்க சமூக ஆர்வலர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வாக்குகள் எப்படியெல்லாம் விலைக்கு வாங்கப்படுகின்றன என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
நமது தேசத் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வாங்கிய விடுதலையும், ஜனநாயகமும் ஊழல்வாதிகளால் விலைக்கு வாங்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தை இந்த ஆய்வுகளின் முடிவுகள் ஏற்படுத்துகின்றன.
புதுடெல்லியைச் சேர்ந்த ஊடக ஆய்வு மையம் (Centre for Media Studies) நடத்திய "மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் போக்கு: 2007- 2014" என்ற தலைப்பிலான ஆய்வுகளின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதில் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் போக்கு தான் அனைத்து ஊழல்களுக்கும் தாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஓட்டுக்காக மக்களுக்கு தரப்படும் பணத்தின் அளவு கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பணம் கொடுத்து வெற்றி பெறும் வேட்பாளர்கள் செலவழித்ததைவிட பலமடங்கு பணத்தை சம்பாதிக்கத் துடிப்பதால் தான் ஊழல் உருவாகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது. கடைசிநேரத்தில் மனதை மாற்றிக்கொள்ளும் வாக்காளர்களில் 70 விழுக்காட்டினரின் மனமாற்றத்திற்கு முதன்மையான காரணம் பணம் என்பது தான் இந்த ஆய்வு கூறும் அபாயகரமான உண்மையாகும்.
குறிப்பாக, மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் 78 விழுக்காட்டினரின் வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றன; ஒட்டுமொத்த வாக்காளர்களில் 34 விழுக்காட்டினர் பணம் பெற்றுக் கொண்டு தான் வாக்களிக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே வாக்கு ஊழல் எந்த அளவுக்கு ஆலமரம் போல கிளை பரப்பி வளர்ந்திருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும்.
வாக்குகளை விலைக்கு வாங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும். வாக்காளர்களுக்கு பணத்தையும், பரிசுகளையும் வாரி இறைத்து வாக்குகளைப் பெறுவதென்பது அத்துடன் முடிந்து விடக் கூடிய விஷயமல்ல. மாறாக, புதிதுபுதிதாக உருவாகவுள்ள மிகப்பெரிய ஊழல்களுக்கான தொடக்கம் தான் அது என்பதை உணர மக்கள் மறந்து விடுகிறார்கள்.
தவறுகளை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான ஒரேவழி மற்றவர்களையும் தவறு செய்ய வைப்பது தான் என்ற உத்தியை புரிந்து வைத்துள்ள சில தமிழக கட்சிகள், வாக்காளர்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களையும் கையூட்டு பெறுபவர்களாக மாற்றிவிடுகின்றனர். வாக்குக்கு பணம் வாங்கி பழகிவிடும் மக்களுக்கு அதன் பின் ஊழல் ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ள இன்னொரு உண்மையாகும். வாக்காளர்களில் 2 விழுக்காட்டினர் மட்டுமே ஊழலை ஒரு முக்கிய பிரச்சினையாக கருதுகின்றனர் என்றும், 29 விழுக்காட்டினர் கடந்த ஓராண்டில் ஏதேனும் ஓர் அரசு சேவையை பெறுவதற்காக கையூட்டுக் கொடுத்துள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஊழல் ஒரு பெரிய விஷயமல்ல; அரசு சேவையை பெறுவதற்காக கையூட்டு கொடுத்துதான் ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு மக்களை தள்ளியிருக்கிறது என்றால், ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் எத்தகைய சமூக சீரழிவை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறியலாம்.
தமிழ்நாட்டு உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச பணம் 500 ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆகவும், அதிகபட்ச பணம் ரூ.2,000லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்ந்து விட்டது. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக ரூ.10,000 கோடி மட்டுமே செலவிடப்பட்ட நிலையில், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் ரூ.35,000 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த காலகட்டத்தில் நாட்டில் ஊழல் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது என்றும் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் ஊழல் அதிகரிக்க ஓட்டுக்கு பணம் தருவது தான் முதன்மையான காரணம் என்று தெரியவந்துள்ள நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வந்து ஓட்டுக்கு பணம் இல்லா தேர்தலையும், ஊழல் இல்லா இந்தியாவை உறுதி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்களாக பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தேர்தல் விதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் இவர்களின் பங்கு மகத்தானது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என். கோபாலசுவாமி, முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு சென்னையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
சமூக நலன் சார்ந்த பிரச்சினைகளில் குரல் கொடுத்து வரும் இவர்கள், புற்றுநோயைப் போல சமுதாயத்தைச் சீரழித்து வரும் ஓட்டுக்குப் பணம் தரும் கலாச்சாரத்திற்கு எதிராக இயக்கம் நடத்த முன்வர வேண்டும். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றி முடித்து சமூகப்பணியில் ஈடுபட்டுள்ள எம்.ஜி. தேவசகாயம் போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் இப்பணியில் அவர்களுடன் கைக்கோர்க்க வேண்டும்.
அதிக அளவில் இளம் வாக்காளர்கள் உள்ள கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது வெட்கப்பட வேண்டிய சமூகத் தீமை என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டும். ஊடகங்களும் இந்த அவலத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக தேர்தல்களை கொள்கை அடிப்படையில் தான் சந்திப்போம்; வாக்காளர்களுக்கு எக்காலத்திலும் பணம் கொடுக்க மாட்டோம் என்று தமிழகத்தில் உள்ள கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top