புதுடெல்லி, டிச.8- 

4 அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் 3-வது கட்ட போட்டிகள் டெல்லியில் நடந்து வருகின்றன. இதில் இந்தியன் ஏசஸ் அணிக்கு வலு சேர்க்கும் விதமாக உலக நட்சத்திரம் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் நேற்று அதிகாலை டெல்லிக்கு வருகை வந்தார். அதைத் தொடர்ந்து மாலையில் நடந்த சிங்கப்பூர் சிலாமர்ஸ் அணியை எதிர்த்து அவர் களம் இறங்கினார். 
பிரிமியர் டென்னிஸ் லீக்: பெடரரின் அசத்தலால் இந்தியன் ஏசஸ் அணி வெற்றி
முதல் முறையாக இந்திய மண்ணில் ஆடிய பெடரரை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். அவர் சானியா மிர்சாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் ஆடினார். பெடரர்-சானியா ஜோடி 6-0 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியின் புருனோ சோரஸ்-ஹன்ட்சோவா இணையை பந்தாடியது.

பின்னர் பெடரர்-ரோகன் போபண்ணா ஜோடி ஆண்கள் இரட்டையரில் 6-1 என்ற கணக்கில் நிக் கிர்ஜியோஸ்-லெய்டன் ஹெவிட் ஜோடியை தோற்கடித்தது. முன்னதாக ஒற்றையரில் பெடரர் 6-4 என்ற கணக்கில் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையரில் ஏசஸ் வீராங்கனை இவானோவிச் 6-5 (7-5) என்ற கணக்கில் ஹன்ட்டுசோவாவை விரட்டினார். 

ஜாம்பவான்கள் ஆட்டத்தில் சிங்கப்பூரின் பாட் ராப்டர் 6-2 என்ற செட் கணக்கில் ஏசஸ் வீரர் பீட் சாம்ப்ராசை வென்றார். இருப்பினும் 5 ஆட்டங்கள் முடிவில் இந்தியன் ஏசஸ் அணி 26-16 என்ற கேம் கணக்கில் சிங்கப்பூரை எளிதில் சாய்த்தது. சானியா மிர்சா கூறும் போது, ‘ரோஜர் பெடரருடன் இணைந்து விளையாடியது மிகப்பெரிய கவுரவம். 

இப்போது ஆஸ்திரேலிய ஓபனிலும் அவருடன் இணைந்து ஆட விரும்புகிறேன்’ என்று தமாசாக குறிப்பிட்டார். 8-வது லீக்கில் ஆடிய ஏசஸ் அணி 6 வெற்றி, 2 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. டெல்லியில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் இந்தியன் ஏசஸ் அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராயல்சை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top