புதுடெல்லி, டிச. 2-

சகாரா நிறுவனம் முதலீட்டாளர்களிடம் திரட்டிய பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கு ரூ.10 ஆயிரம் கோடியை பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ.2700 கோடி மதிப்புள்ள 4 சொத்துக்களை விற்க சகாரா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
இந்த தொகையை ஏற்பாடு செய்வதற்கான முயற்சியில் சகாரா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு சிறை வளாகத்தில் சுப்ரதா ராய்க்காக சிறப்பு ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள 4 சொத்துக்களை விற்பனை செய்வற்கு சகாரா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. கோர்ட் உத்தரவிற்கு ஏற்ப நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகள் இருந்ததையடுத்து, ஜோத்பூர், புனே, குர்கான் மற்றும் மும்பையின் வாசாய் பகுதியில் உள்ள ரூ.2710 கோடி மதிப்பிலான இந்த சொத்துக்களை விற்க நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக நீதிமன்ற ஆலோசகர் மற்றும் மார்க்கெட் ரெகுலேட்டர் கேட்கும் அனைத்து தகவல்களையும் ஒரு வாரத்திற்குள் வழங்க சகாரா நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

உள்நாட்டில் உள்ள சொத்துக்களில் அகமதாபாத்தில் உள்ள ஒரு சொத்தினை ரூ.411.82 கோடிக்கு சகாரா நிறுவனம் விற்பனை செய்து, அந்த தொகையை செபியின் கணக்கில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top