சென்னை, டிச.2–
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளது.
2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் வேலை, புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கும் பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதிகாரிகளின் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும், வங்கிகளின் லாபத்தை கபளீகரம் செய்யும் வராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
இதை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வங்கி உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து பிரிவு ஊழியர் சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
முதல் கட்டமாக இன்று தமிழ்நாடு, புதுவை, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 தென் மாநிலங்களில் வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த மாநிலங்களில் உள்ள 23 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிபுரியும் 1 லட்சத்து 50 ஆயிரம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதனால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டது. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வங்கிகள் செயல்படவில்லை.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலைகள் மற்றும் பணப்பரிமாற்றம் முடங்கியது. வர்த்தகர்களும், வாடிக்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இன்று ‘ஸ்டிரைக்’ நடைபெறுவதையொட்டி அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் நேற்றே பணம் இருப்பு வைக்கப்பட்டது. இதனால் ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் திறந்து இருந்தன. அதில் பணம் இருக்கும் வரை எடுத்துக் கொள்ளலாம்.
சமீபத்தில் கியாஸ் மானியம் பெறுவதற்கான ஆதார் அட்டைகளை வங்கிகளில் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. வங்கிகள் மூடப்பட்டதால் ஆதார் அட்டை பதிவு செய்யும் பணியும் நடைபெறவில்லை.
இது ஒரு நாள் ஸ்டிரைக் என்பதால் நாளை முதல் வங்கிப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 1 1/2 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னையில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுபற்றி வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், சங்கர வடிவேலு ஆகியோர் கூறுகையில், ‘‘தென் மாநிலங்களில் இன்று நடந்த ஸ்டிரைக்கில் 1½ லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். 6 மாநிலங்களிலும் உள்ள 23 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்பட்டன. எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றனர்.
ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்ஸிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
2–வது கட்டமாக நாளை (3–ந்தேதி) டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் வங்கி ஸ்டிரைக் நடைபெறுகிறது.
3–வது கட்டமாக 4–ந்தேதி (வியாழக்கிழமை) மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், திரிபுரா உள்பட கிழக்கு மாநிலங்களிலும், 4–வது இறுதி கட்டமாக குஜராத், மராட்டியம், கோவா உள்பட மேற்கு மாவட்டங்களிலும் வங்கிகள் ஸ்டிரைக் நடைபெறுகிறது.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top